தமிழ்நாட்டில் முதல் முறையாக திருச்சியில் முழு எழுத்தறிவு இயக்கம்

முழு எழுத்தறிவு இயக்கம்

முழு எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு.

  • Share this:
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முழு எழுத்தறிவு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்திற்கு ஒரு ஒன்றியத்தில் முழு எழுத்தறிவு இயக்கம் என்கிற இலக்குடன் தமிழ்நாட்டில் முதல் முறையாக திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில்  தன்னார்வலர்களைக் கொண்டு, 73 இடங்களில் தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பேர் பங்களிப்பில் முழு எழுத்தறிவு இயக்கம் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முழு எழுத்தறிவு இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவராசு, முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கு, எழுத்தறிவு பெற ஆர்வமாக வந்த முதியோர்களுக்கு தன்னார்வலர்களின் பங்களிப்பில் சிலேட்டு, சாக்பீஸ் வழங்கப்பட்டன. வயதான முதியோர்களுக்கு பேத்திகள், அவர்களைப் போல் உள்ள வயதினர் பெயர்களை எழுதக் கற்றுக் கொடுத்தனர்.

குறிப்பாக நிகழ்வின் தொடக்கமாக அஞ்சலை என்கிற மூதாட்டிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விரல்களைப் பிடித்து எழுதக் கற்றுக் கொடுத்தார். மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒரு முதாட்டிக்கும் எழுதக் கற்றுக் கொடுத்தார். வெறும் பெயரை எழுத வைத்தல் மட்டுமல்ல, எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 81%. இதை மூன்றாண்டுகளில் 100% ஆக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக பள்ளிகளில் மட்டுமின்றி, பள்ளிக்கு வெளியே கிராமப்புறங்களில், முதியோர்கள், தொழிலாளர்களுக்கும் கையெழுத்து போட மட்டுமல்ல எழுத, படிக்கவும் கற்றுத் தரப்படும். ஏற்கனவே இது போன்ற திட்டங்கள் இருந்தாலும் முழு எழுத்தறிவு இயக்கம் இப்போது புத்துணர்வுடன் செயல்படுத்தப் படுகிறது.

Must Read : Pegasus  | செல்போனை ஒட்டுக்கேட்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு

அதை திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் கள்ளிக்குடியில் தொடங்கியுள்ளோம். மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள கல்வியறிவு இல்லாத  8 ஆயிரம் பேருக்கு  69 நாட்களில் எழுத்தறிவு அளிக்க உள்ளனர். இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் இதை செயல்படுத்த உள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

முழு எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு வைத்துள்ளோம் என்றார். மேலும், ‘பாட்டிகளுக்கு பெயர் எழுதக் கற்றுக் கொடுத்த பெருமையாக இருந்தது’ என்று சிறுமிகளும்; ‘இப்போது பெயர் எழுதுகிறேன், விரைவில் எழுதவும் படிக்கவும் செய்வேன்’ என்று முதியோர்களும் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
Published by:Suresh V
First published: