புறக்கணித்தால் இழப்பே...! அரசுப்பள்ளிகளின் ஆதங்கம்

”நீட் திணிப்பு, அதைத்  தொடர்ந்து அதிகரித்துள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை,  புதிய கல்விக் கொள்கையின் பேராபத்து இவற்றுக்கிடையே அரசுப் பள்ளிகளின்  மாணவர் சேர்க்கை வீழ்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது”

புறக்கணித்தால் இழப்பே...! அரசுப்பள்ளிகளின் ஆதங்கம்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: August 3, 2019, 11:27 AM IST
  • Share this:
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 2, 47, 629 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 67, 929 மாணவர்களும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு குறைவாக சேர்ந்துள்ளனர்.

மொத்தம் 1, 248 அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நாற்பத்திரண்டு பள்ளிகளில் ஒருவர் கூட சேரவில்லை. ஆனால், தனியார் பள்ளிகளில் 12.10 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டை விட கூடுதலாக சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில் ரூ. 28, 757 கோடி உட்பட பள்ளிக் கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடி.

தனியார் பள்ளி ஆசிரியர்களை விட, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம், அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், புத்தகம் , சீருடை, மடிக்கணினி, மிதிவண்டி என 14 வகையான இலவசப் பொருட்கள்


இவ்வளவு இருந்துமா? இந்த நிலை என்று  பள்ளிக்கல்வித்துறையின் புள்ளி விபரம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அரசுப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் விரும்பாமைக்கு என்ன காரணம்? ஒரே பாடத்திட்டம் இருந்தும் உண்மையிலேயே அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாகத்தான் உள்ளதா? அரசு வேலையில் சேர வேண்டும் என்பதில் உள்ள ஆர்வம், அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில் இல்லையே ஏன் ? என்கிற கேள்விகள் எழுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் பெருவளநல்லூரிலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் மற்றும் ரூ. 6.5 லட்சத்திற்கு புதிய கட்டடப்பட்ட கட்டடம் இருந்தும், அந்தப் பள்ளியில் ஒருவர் கூட சேரவில்லை.
திருவண்ணாமலையில் புரணமைக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி


அதே திருச்சியில் எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியர்கள் பற்றாக்குறைக் இருந்தும், முதல் வகுப்பில் 102 மாணவர்களைச் சேர்த்துள்ளது மட்டுமின்றி, தனியார் பள்ளிகளைத் தவிர்த்து விட்டு, இந்த பள்ளியில் மாணவர்கள் விரும்பி சேர்க்கப்படுள்ள நிலையும் இருக்கிறது.

ஏன் இந்த பெரும் முரண்?

ஆசிரியர்களிடம் கேட்டால், அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகளைச் சொல்லி, பெற்றோர்களை நாங்கள் அணுகுவதற்கு முன்பே தனியார் பள்ளிகள் முந்திக் கொண்டு, 2 வயதிலேயே மாணவர்களை அங்கு சேர்த்து விடுகின்றனர். பல தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் எல்லாம் மோசம் என்கிற ரீதியில் பெற்றோர்களிடம் மிகைப்படுத்தி, தவறான எண்ணத்தை விதைத்து விடுகின்றனர். பிள்ளைகளின் எதிர்காலம் ரிஸ்க் எடுக்க முடியாதுங்க என்று தனியார் பள்ளிகளின் வலையில், விட்டில் பூச்சியாய் விழுந்து விடுகிறார்கள். தனியார்  பள்ளிகளில் கட்டணத்தைக் கொடுத்தும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் நாளிதழ்களைக் கூட படிக்கத் தெரியாத மாணவர்களும் உள்ளனர். மாறாக அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சரளமாக பேசவும், படிக்கவும் செய்கின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளுக்கு எந்தவித விளம்பரமும் இல்லை. தனியார் பள்ளிகளுக்கு கவர்ச்சிகரமான விளம்பர வெளிச்சம் உள்ளது என்று ஆதங்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து பேசிய பெற்றோர் ஒருவர், ‘புகழ் பெற்ற தனியார் பள்ளிகளில் எங்கள் குழந்தைகளைச் சேர்ப்பது எங்களுக்கு கவுரமாக இருக்கிறது. அரசுப் பள்ளிகள் என்றால் தரமிருக்காது என்று எங்கள் மனதில் பதிந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் இருந்தாலும் கடைசி நேரத்தில் தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகிறோம்’ என்றார்.

அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை இல்லாமல், பிறரைப் பார்த்து தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டு, பணம் கட்ட முடியாமல் கடன்மேல் கடன் வாங்கித் தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களையும் அதிகம் பார்க்க முடிகிறது.

அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், கல்வி மேலாண்மைக் குழுக்கள் உள்ளன. இந்த அமைப்புகள் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா? செயல்படுகின்றனவா? இவற்றில் பங்கெடுத்து, பள்ளியின் தரத்தை மேம்படுத்த எத்தனை பெற்றோர்கள் முன்வருகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்திரயான் 1 ஏவிய மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 ஏவிய இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட பல சாதனையாளர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைக்கு ஓரிரு கி.மீ இடைவெளியில் அரசுப் பள்ளிகள் அமைந்துள்ளன. ஆனால், ஆரம்பக்கல்விக்கே பல மைல் தூரங்கள் நடக்க வேண்டும் என்று பள்ளிக்கூடத்தின் பக்கமே செல்ல முடியாத தலைமுறைகளும் உண்டு.
சாதிக்கும் அரசுப் பள்ளிகள் அனைத்தும் முன்மாதிரி தான். அவை விதி விலக்குகள். விதி விலக்குகள் விதியாகாது. ஒரிரு அரசுப் பள்ளிகள் மோசமான முன்னுதாரணங்களாக இருக்கிறது என்பதும் கசப்பான உண்மைதான். அனைத்து அரசுப் பள்ளிகளையும் நல்ல முன்னுதாரணங்களை உருவாக்குவது ஆசிரியர்கள், பெற்றோர்களால் மட்டுமே சாத்தியம் என்பதும் யதார்த்தமான உண்மை. அதற்கு முதலில் பெற்றோர்களின் மனப்பாங்கு மாற வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் இன்னும் மேம்பட, சாதிக்கும் பள்ளிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக ஆர்வலர்களும், தனியார் நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

பெருகி வரும் தனியார் பள்ளிகளின் வணிக யுக்திகளால் அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே புறக்கணிக்க வைக்கப்படுகின்றன. முதலில் மாணவர் சேர்க்கையை குறைத்து, படிபடிப்பாக அவற்றை மூட வைத்து விட்டு, தனியார் பள்ளிகள் லாபத்தில் திளைக்க திட்டமிடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் கல்வியாளர்களால் முன் வைக்கப்படுகிறது.

நீட் திணிப்பு, அதைத்  தொடர்ந்து அதிகரித்துள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை,  புதிய கல்விக் கொள்கையின் பேராபத்து இவற்றுக்கிடையே அரசுப் பள்ளிகளின்  மாணவர் சேர்க்கை வீழ்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே ,தனியார் பள்ளிகள் கட்டுப்பாடின்றி பெருகி வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அருகாமைப் பள்ளி என்கிற அடிப்படையில், அரசுப் பள்ளிக்கு ஒரு கி.மீ தூரத்திற்குள் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கூடாது. விதிமுறைகளை மீறியும், தரமின்றியும் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்காமல், அவற்றை நிரந்தரமாக மூட வேண்டும். இதற்கு அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் பலன்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மாணவர் சேர்க்கையிலும்  கவனம் செலுத்த வேண்டும். அறிவிக்கப்படும் திட்டங்கள், ஒதுக்கப்படும் நிதியின் பலன் முழுமையாக மாணவர்களுகே கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
நிறைவாக, வணிக இலக்கின்றி, சேவையை மட்டும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளை புறக்கணித்தாலும், புறக்கணிக்க வைக்கப்பட்டாலும் எதிர்கால இழப்பு என்னவோ மக்களுக்குத்தான். ஏனெனில், அரசுப் பள்ளிகள்… அவை மக்களின் பள்ளிகள்...

- கட்டுரையாளர் ஜோ. மகேஸ்வரன்
First published: August 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்