Super Exclusive: நன்றாக படிக்காத மாணவர்களை வடிகட்டும் பள்ளிகள்: 55,200 பேர் பொதுத்தேர்வு எழுதாதது அம்பலம்!

மாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுதாமல் போவதற்கு புதிய பாடத் திட்டம், சிறப்பாக செயல்படாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வடிகட்டுவது, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுதுவது ஆகியவையே காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

Super Exclusive: நன்றாக படிக்காத மாணவர்களை வடிகட்டும் பள்ளிகள்: 55,200 பேர் பொதுத்தேர்வு எழுதாதது அம்பலம்!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: May 10, 2019, 12:32 PM IST
  • Share this:
தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் பொதுத்தேர்வுக்கு பதிவுசெய்த மாணவர்களில் 55,200 பேர் தேர்வு எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், 2017-18-ம் கல்வியாண்டு முதல் 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நன்றாக படிக்காத மாணவர்களை பொதுத்தேர்வுகளில் கலந்துகொள்ள தனியார் பள்ளிகள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் நோக்கில், கடைசி நேரத்தில் மாணவர்களை தனியார் மையங்கள் மூலம் தேர்வெழுதுமாறு பள்ளிகள் நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கு பதிவுசெய்த மாணவர்களில் 55,200 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வுத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்துகொள்ள 8,61,107 பேர் பதிவுசெய்திருந்தனர். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியானபோது, 8,42,512 பேர் மட்டுமே தேர்வெழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 18,595 பேர் இந்த ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொறுத்தவரை, 8,16,618 மாணவ, மாணவிகள் பதிவுசெய்திருந்தனர். ஆனால், தேர்வு எழுதியவர்கள் 8,01,772 பேர் தான். இதன்மூலம், 14,846 பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெளிவாகியுள்ளது.இதேபோல, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொறுத்தவரை, 9,59,618 பேர் பதிவுசெய்திருந்தனர். அவர்களில் 9,37,859 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதிகபட்சமாக 21,759 மாணவ, மாணவிகள் தேர்வை புறக்கணித்துள்ளனர். இந்த மூன்று பொதுத்தேர்வுகளிலும் சேர்த்து 55,200 மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

இத்தனை மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளாதது கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுதாமல் போவதற்கு புதிய பாடத் திட்டம், சிறப்பாக செயல்படாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வடிகட்டுவது, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுதுவது ஆகியவையே காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கூலித் தொழிலாளிகளாக மாறும் சூழ்நிலை ஏற்படும் என பேராசிரியர் சிவகுமார் தெரிவித்தார்.

மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்த சர்ச்சையில், தமிழக அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும் என கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இதேபோல, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளானதுடன், அச்சமடைந்துள்ளனர். பிளஸ் ஒன் தேர்வில் தேர்ச்சிபெறாதவர்கள், உடனடியாக தேர்வெழுத வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்படுகிறது. இவை அனைத்தும் மாணவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக கருதப்படுகிறது.

எனவே, மாணவர்கள் தேர்வு எழுதாமல் போனதற்கான உண்மையான காரணங்கள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. இதற்காக பள்ளிகளில் ஆய்வு நடத்துவதுடன், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் பல லட்சங்களைக் கொடுத்து தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள், தேர்வெழுதும் வாய்ப்பை இழப்பதால், மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இதனை சமாளிப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்ற கேள்வி எழுகிறது.

Also see...

First published: May 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்