நவம்பர் 16 அன்று பள்ளிகள் திறக்கப்படாது எனவும், பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
”அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பல்வேறு பொருட்களை வாங்க கடைவீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிகமாக கூடுகின்றனர். அவ்வாறு கூடும்போது, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாது இருப்பது, ஊடகங்கள் வாயிலாகவும், களஆய்வுகள் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு தெரிய வருகிறது.
வெளிநாடுகளில் கொரொனா நோய்த் தொற்றானது இரண்டாம் அலையாக மீண்டும் பரவும் நிலையை நாம் காண முடிகின்றது. இச்சூழ்நிலையில் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகள்/கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் என வல்லுநர்களும், பெற்றோர்களும் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி /கல்லூரி விடுதிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும், 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததால், 9.11.2020 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் கருத்து கேட்கப்பட்டது.
சில பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் சில பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போதைக்கு திறக்கவேண்டியதில்லை என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த இருவேறு கருத்துக்களையும் கல்வித்துறை ஆராய்ந்து, 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.
அதேபோல், கல்லூரிகளை 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதன்படியும், 5.11.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி / பல்கலைக்கழகங்களை 2.12.2020 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது.
மேலும், இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
2.12.2020 அன்று திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.
பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழி கல்விமுறை தொடர்ந்து நடைபெறும். கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt School, Private schools, Tamilnadu government, Tn schools