Home /News /education /

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் - தனியார் பள்ளிகள் கோரிக்கை

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் - தனியார் பள்ளிகள் கோரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகிகள் தீவிரமாக இக்கோரிக்கையினை முன்னெடுத்துள்ளனர். நோய் பரவல் வேகமெடுத்துள்ள சூழ்நிலையில் இது சாத்தியமா.

கொரொனோ பரவலால் மற்ற துறைகளைக் காட்டிலும் கல்வித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு நேரடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இருப்பினும் ஒமிக்ரான் பாதிப்பால் கொரொனோ பரவல் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி செல்ல தொடங்கியதை அடுத்து முதற்கட்டமாக 1 முதல் 9ம் வகுப்புகளுக்கும் அதனைத் தொடர்ந்து 10 முதல் 12-ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி தனியார் பள்ளி நிர்வாகத்தினரை உள்ளடக்கிய முக்கிய சங்கமான தமிழ்நாடு சிபிஎஸ்சிஇ , நர்சரி மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் சந்தித்து பள்ளிகளை திறக்க வலியுறுத்தி மனு கொடுக்க முடிவெடுத்துள்ளதுடன் இக் கோரிக்கையை அரசிடமும் வலியுறுத்த தயாராகி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் உரிய பாதுகாப்பு வசதிகள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மாணவர்களுக்கு தடுப்பூசிகளும் முறையாக செலுத்தப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டும் அவர் திரையரங்குகள் மதுக்கடைகள் போன்றவையெல்லாம் திறந்து இருக்கும் சூழ்நிலையில் மாணவர்களின் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.

Also Read : அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் - அமைச்சர் பொன்முடி

தனியார் பள்ளி நிர்வாகங்களின் இந்தக் கோரிக்கை தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் தானா என மருத்துவர்களிடம் கேட்டபோது, சுனாமி பேரலை போன்ற தாக்கத்தை தற்போதைய ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். தொற்றின் வேகம் பிப்ரவரி 2வது வாரம் அல்லது 3வது வாரத்தில் குறைய தொடங்கும் என கூறும் மருத்துவர்கள் அதன்பிறகு படிப்படியாக பள்ளிகளை திறக்க அரசு பரிசீலிக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். எனவே உடனடியாக தற்போது பள்ளிகளை திறப்பது என்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்றும் தெரிவிக்கின்றனர்

படிப்பு முக்கியமென்றாலும் அதைக்காட்டிலும் உயிர் முக்கியம் என்பதால் தற்போதைய சூழ்நிலையில் நோயின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்ப முடிவுகளை எடுத்து செயல்படுத்துவதே சரியாக இருக்கும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Corona, Omicron, School open

அடுத்த செய்தி