தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு - அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் அறிவுறுத்தல்

பள்ளி மாணவிகள்

மாணவர்கள் போட்டி த்தேர்வுக்கு தயாராகும் விதமாக பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பெற்றோர், மாணவர்கள் பயப்படத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேநேரம் பள்ளிக்கு வர வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறவுள்ளது. வாரத்தில் ஆறு நாட்களும் வகுப்புகளை நடத்தவும், ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டும் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமர வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், மாணவர்களுக்கு நாள்தோறும் உடல்வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும், பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாதபட்சத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்தலாம் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பள்ளி வளாகங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் தயக்கமின்றி பள்ளிக்கு வரலாம் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.பள்ளிகள் திறப்பிற்கான இறுதி கட்ட பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்கள் ஆய்வு செய்ததுடன், கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்தனர்.

    Also Read : நாட்டின் அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கிறது - மு.க.ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் பாராட்டு!

    சென்னை திருவல்லிக்கேணி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் அணிந்து வரும் மாஸ்க் கிழிந்துவிட்டால் அவர்களுக்கு மாற்று முகக் கவசம் வழங்கும் வகையில் பள்ளிகளில் மாஸ்க் கையிருப்பில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு வகுப்பறை மற்றும் கழிவறைக்கு வெளியிலும், கிருமி நாசினி வைத்திருத்தல் கட்டாயம். தனிமனித இடைவெளியை பின்பற்றி, ஒரு பெஞ்ச்சில் இருவர் மட்டுமே அமர வைக்க வேண்டும். சுழற்சி முறையிலான வகுப்புகளுக்காக, காலியாக உள்ள 1 முதல் 8ம் வகுப்பிற்கான அறைகளும் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

    வாரத்தின் ஆறு நாட்கள் செயல்படும் பள்ளிகளில் உடற்பயிற்சி பாடவேளைகள் இருக்காது என தெரிவித்தார். மேலும், பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களை படிக்க கூறி அழுத்தம் தர வேண்டாம் எனவும், பள்ளிக்கு விரும்பி வரும் சூழலை ஏற்படுத்துமாறும், ஆசிரியர்களுக்கு வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

    அதன்பிறகு நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் குறித்து இன்னும் முடிவெடுக்கவிலை என்றும் மாணவர்கள் போட்டி த்தேர்வுக்கு தயாராகும் விதமாக பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடக் கோரி நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதின் தொடர்ந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு தரப்பில், ஆசிரியர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், பள்ளி திறக்காததால் மாணவர்களிடையே கல்வி ஆர்வம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று தான் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும், நேரடி வகுப்புகளுடன், ஆன்லைன் வகுப்பும் தொடரும் என்றும் வாதிடப்பட்டது.

    இதனை கேட்ட நீதிபதிகள், பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். நேரடி வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: