தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கிய காரணத்தால் கடந்த மாதம் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இன்று (பிப்ரவரி 1) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
தமிழக அரசு ஊரடங்கை கடந்த 27ஆம் தேதி விலக்கிக் கொண்டது. அத்துடன் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, இன்று முதல் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது.
இன்று திறக்கப்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து மாணவர்களுக்கும், 100 சதவீதம் நேரடி வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல், கல்லூரிகளிலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நேரடி வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளை, முககவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Must Read : நெல் கொள்முதல்: ஆன்லைன் பதிவை நீக்குவதே உழவர்களைக் காப்பாற்றும்.. அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில், 1ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இன்று நேரடி வகுப்புகள் தொடங்குவதால், மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
இதேபோல, புதுச்சேரி மாநிலத்தில் வரும் பிப்ரவரி 4ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.