கடந்த 2018ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கவும் , உயர்கல்வி குறித்தும் ஆலோசனை வழங்க பள்ளி தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டு 14417 என்கிற உதவி எண் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான உதவி எண் 14417 அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டம் தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள். மனநல ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை 14417 எண்ணிற்கு தொடர்புகொள்வதன் மூலம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த எண் தொடங்கப்பட்ட 2018ம் ஆண்டு முதல் மாணவர்களிடையே சற்று குறைவாக இருந்த விழிப்புணர்வு பின்னர் படிப்படியாக அதிரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடையே பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகம் பெறப்பட்டன.
இதனையடுத்து பள்ளி வளாகங்களில் நடைபெறும் பாலியல் புகார்கள் தொடர்பாக மாணவர்கள் 14417 எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதுடன், பள்ளி வளாகங்களில் எழுதப்பட்டு, புத்தகங்களிலும் இந்த எண் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் முத்திரையிடப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களில் 14417 எண் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கடந்த 6 மாதங்களில் கள்ளக்குறிச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல 52 பாலியல் புகார்களும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு காவல்துறை மூலம் உரிய தீர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் 14417 உதவி எண்ணை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பராமரித்து வரும் தனியார் நிறுவன அலுவலர்கள்.

உதவி எண் 14417
பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் பள்ளி வளாகங்களில் அதிகரித்த பிறகு, பள்ளிக் கல்வி உதவி எண்ணுக்கு அழைப்புகள் மாணவர்களிடம் இருந்து அதிகளவில் வரத் தொடங்கியிருக்கின்றன. ஒரு விதத்தில் இத்தகைய விழிப்புணர்வு பள்ளி வளாகங்களில் நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க உதவும் என்கின்றனர் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள்.
Must Read : நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்.. கல்லூரி மாணவிக்கு கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை - அச்சத்தில் குன்றத்தூர் மக்கள்
மேலும், குற்றச்செயல்களில் பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் யாரேனும் ஈடுபடும் எண்ணம் கொண்டாலும் பள்ளிக்கல்வி உதவி எண்ணிற்கு புகார்கள் தெரிவிக்கப்படும் என்கிற அச்சமும் ஆசிரியர்களிடையே எழும் என்பதாலும் குற்றங்கள் குறைய வாய்ப்பிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், 14417 உதவி எண்ணுக்கு பாலியல் குற்றச்சாட்டுகள் தவிர்த்து மாணவர்கள் உயர்கல்வி, அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டம் சார்ந்து பல்வேறு தகவல்களை கோருகின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது மாணவர்களிடையே எழுந்துள்ள எத்தகைய விழிப்புணர்வு வரும் காலங்களில் குற்றங்களை குறைக்கும் என்று நம்பலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.