Home /News /education /

RTE மூலம் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம்..

RTE மூலம் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம்..

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா பெருந்தொற்று உருவாக்கிய கல்வியியல் சார்ந்த நெருக்கடிகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை  தமக்கான வாய்ப்பாக மாற்றத் தொடங்கியது.

Admissions under RTE Act: கொரோனா தொற்றுக்குப் பிந்தைய காலத்தில், தமிழகத்தில் மீண்டும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை உணர்த்தும் விதமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த கல்வியாண்டில்  கூடுதலாக  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், சுயநிதிப் பள்ளிகள் தங்களது  தொடக்க வகுப்பில் 25% இடங்களை நலிவடைந்த பிரிவினருக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கும் ஒதுக்க வேண்டும். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2022-23 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான  விண்ணப்பங்கள்  ஏப்ரல் 20ந் தேதி  முதல் மே 25 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன.

8 ஆயிரத்து 238 தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 94ஆயிரத்து 256 இடங்களுக்கு, 1 லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவர்கள்  rte.tnschools.gov.in என்றஇணையதளம்  மூலம் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் என்று கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, கடந்த கல்வியாண்டில் (2021-22) 82,857 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.  அதற்கு, முந்தைய கல்வியாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் எண்ணிக்கை 1, 30,0 14 ஆக இருந்தது.

தகுதியான விண்ணப்பதாரர் , தகுதியில்லாத விண்ணப்பதார் விபரம், நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் பள்ளித் தகவல் பலகையிலும்,  rte.tnschools.gov.in  என்ற இணையதளத்திலும் இன்று (மே  28) வெளியிடப்படும்.

பள்ளியில் 25 சதவிகித  இடங்களை விட கூடுதலாக  மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தால், அந்த இடங்களுக்கு  மே 30-ம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களின்  விபரம் மே 31 ந் தேதி வெளியிடப்படும்.

அரசுப் பள்ளி:  கொரோனா பெருந்தொற்று முடக்க காலம், பொருளாதார நெருக்கடி, மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, அரசுப் பணிகளில் தமிழ் வழி பயின்றோருக்கு  இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தமிழகத்தில் அதிகரித்து காணப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று உருவாக்கிய கல்வியியல் சார்ந்த நெருக்கடிகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை  தமக்கான வாய்ப்பாக மாற்றத் தொடங்கியது.  அரசுப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலுக்கு உகந்த சூழலை வழங்குவதற்கும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கும் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான  முயற்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டன.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ.7000 கோடி ஒதுக்கப்படும் என்று  கடந்த நிதியாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை உருவாக்கும் விதமாக, ஐஐடி போன்ற நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முழு செலவை மாநில அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்தது.

மேலும், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு/தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக்கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் அறிவித்தது.

அரசுப் பள்ளியில் அதிகரிக்கும் மாணவர்களின் அத்துமீறல்கள்... விதிகள் என்ன? தீர்வு எது?

இருப்பினும், கொரொனொ தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் மத்தியில் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர ஆர்வம் அதிகரித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு  வசதிகள் மற்றும் இதர வாய்ப்புகளைத் தாண்டி ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே  பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மாணவர்களுக்கு மனரீதியான ஆலோசனையை வழங்குவது, வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவது, மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி உரிய  நேரத்தில் மதிப்பீடுகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
Published by:Murugesh M
First published:

Tags: RTE

அடுத்த செய்தி