மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்தால் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில், அண்மைக்காலங்களில் மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் நேரிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாணவர்களும் பொதுமக்களும் விபத்துகளில் சிக்குகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் பள்ளி வளாகங்களுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருகை புரிந்தால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பள்ளி மாணவர்கள் பலர் விதிகளை மீறி பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே, இதை தடுக்கும் வகையில் பள்ளி முடிந்தவுடன் மாணவர்களை கும்பலாக ஒரே நேரத்தில் வெளியே அனுப்பாமல் 15 நிமிட இடைவேளையில் தனித்தனி குழுக்களாக மாணவர்களை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Must Read : மெழுகுவர்த்தியில் தொடங்கிய வாழ்க்கை பெரு வெளிச்சத்தை காணப் போகிறது - மகிழ்ச்சியில் நரிக்குறவர் இனமக்கள்
கூட்டமாக மாணவர்களை வெளியே அனுப்புவதால், ஒரே நேரத்தில் பேருந்துகளில் ஏறி படிக்கட்டில் நின்று பயணம் செய்வதால் விபத்துகள் ஏற்படுவதன் காரணமாக, இந்த உத்தரவை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது. குறைவான பேருந்து இயக்கப்படும் தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.