2023 ஜனவரி பேட்சி பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் (BS Degree in Data Science and Applications - Jan 2023 Batch) பட்டப்படிப்பிற்கான விண்ணப்ப செயல்முறையை சென்னை ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் படிப்பு:
நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐஐடி விளங்கி வருகிறது. இதில், மாணவனாக வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. இந்நிறுவனத்தின் பட்டப்படிப்பு திட்டங்களுக்குச் சேர்க்கை ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு மூலமாக நடைபெறுகிறது.
இருப்பினும், இடங்கள் பற்றாக்குறை, கடினமான ஜேஇஇ நுழைவுத் தேர்வு, விழிப்புணர்வு, சமூகச் சூழல் ஆகியவற்றின் காரணமாக விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே வாய்ப்புகளைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை ஐஐடி, உலகின் முதல் ஆன்லைன் இளங்கலை பட்டப்படிப்பு திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த பட்டப்படிப்பில் சேர ஜேஇஇ போன்ற கடினமான தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளத் தேவையில்லை. இந்த திட்டத்தின் கீழ் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. உலகின் எப்பகுதியிலும், எந்த வயதி நிலையிலும், எந்த வாழ்க்கைச் சூழலில் உள்ள மாணவர்களும், இப்பாடத் திட்டத்தில் விண்ணப்பித்து கல்வி கற்க முடியும்.
அடிப்படைத் தகுதிகள்:
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும்.
11ம் வகுப்பு கல்வியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 12ம் வகுப்பு முடித்த பிறகு, தேர்ச்சி பெற்ற பிறகு ஐஐடி படிப்பில் சேர்ந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
தற்போது பட்டப்படிப்பினை(Degree Course) படித்துக் கொண்டே இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது, பெரு நிறுவனங்களில் பணி செய்து கொண்டு இருப்பவர்களும் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது?
புதிய தேசியக் கல்வி கொள்கையின் படி, இந்த பாடத்திட்டம் பலமுறை சேர்க்கை வெளியேறுதல் (Multiple Entry/Exit) முறையை பின்பற்றுகிறது. நான்கு வருட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் முதலாம் ஆண்டில் ஒரு அடிப்படைச் சான்றிதழ் மட்டும் பெற்று வெளியேறலாம். 57 கற்றல் எண்ணிக்கை பெற்று (Credits ) டிப்ளமோ படிப்புடன், 114 கற்றல் எண்ணிக்கையுடன் பிஎஸ்சி பட்டப்படிப்புடன், 142 எண்ணிக்கையுடன் பிஎஸ் பட்டப்படிப்புடன் வெளியேறலாம்.
இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும்.
சேர்க்கை முறை:
அடிப்படை நிலை சான்றிதழ் படிப்புக்கு, சேர்க்கை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், சென்னை ஐஐடி நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
4 வார பயிற்சிக்குப் பிறகு, தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில், தேர்ச்சி பெற்றால் சென்னை ஐஐடி வழங்கும் Bachelor of Science in (Data Science & Applications) பட்டப்படிப்பு சேர்க்கை பெறுவார்கள். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும்.
குறைந்தது, ஒரு டிப்ளமோவை முடித்துள்ள மாணவர்கள் ஃபோர்டு அனலிட்டிக்ஸ், கேபிஎம்ஜி, ஆதித்ய பிர்லா, ரெனால்ட் நிசான், வுநெட், பக்மேன், ஆசியா பசிபிக், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஏற்கனவே உள்ளகப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக சென்னை ஐஐடி தெரிவித்துளளது.
விண்ணப்ப செயல்முறை:
2023 ஜனவரி கட்டத்துக்கான விண்ணப்ப செயல்முறை தற்போது தொடங்கியுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினர்/ ஓபிசி பிரிவினர் | ரூ.3000 |
பட்டியல்/பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளி | ரூ.1500 |
பட்டியல், பழங்குடியினரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி | ரூ.750 |
விண்ணப்பம் செய்வது எப்படி?
https://onlinedegree.iitm.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி: 2023, ஜனவரி 15.
பாடத்திட்டத்தின் தொடக்கமாக புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ்பாடங்களில் அடிப்படை அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து பவுண்டேஷன் நிலையில் கற்பிக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து டிப்ளமோ நிலையில் பாடங்கள் நடத்தப்படும். டிப்ளமோ இன் புரோகிராமிங் படிப்பில், டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் அல்காரிதம்ஸ், ஜாவா புரோகிராமிங்,
வெப் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் (Front and Back end), டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட், லினக்ஸ் புரோகிராமிங் குறித்த அறிமுகம் மற்றும் இரு முழுஅளவிலான மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை இடம்பெறும்.
டேட்டா சயின்ஸ் பாடத்தில் டிப்ளமோ வகுப்பில் மாணவர்களுக்கு இயந்திரக் கற்றல் (Machine learning) குறித்த அடிப்படைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
தரவு சேகரிப்பு, நிறுவனம், தரவு சுத்திகரிப்பு, பகுப்பாய்வு, அனுமானித்தல் போன்ற வணிக ரீதியான அம்சங்கள் மாணவர்களுக்கு விளக்கப்படுகின்றன.
இவற்றுடன் மாணவர்கள் இப் பாடங்களை எந்த அளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவும் வகையில் வணிகத் தரப்பு (business side), இயந்திரக் கற்றலை செயல்படுத்துதல் (ML implementation) ஆகிய இரு செயல்திட்டங்கள் (projects) அமைந்துள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துளளது.
மேலும், விவரங்களுக்கு:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai IIT