12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து குஜராத் வன்முறைகள் பற்றிக் கூறும் பாடப்பகுதியை என்சிஇஆர்டி நீக்கியது.
12ம் வகுப்பு அரசியலறிவு பாடப்புத்தகத்தில், 'இந்திய அரசியலின் சமீபத்திய முன்னேற்றங்கள்' என்ற பிரிவு இடம்பெற்றுள்ளது. இதில் 1990க்குப் பிந்தைய காலப்பகுதியில் ஏற்பட்ட மண்டல் ஆணைக்குழு போராட்டம், தலித் அரசியல் எழுச்சி, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் ஆகிய கருத்துக்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகள்
குஜராத் கலவரங்களை பற்றிய விவரக் குறிப்பில், " கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறை கட்டவிழக்கப்பட்டது. இதில், 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மாநில அரசைக் கண்டித்த தேசிய மனித உரிமை ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைத்தது. 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை போன்று, பிரிவினை வேட்கைகளுக்கு அரசு இயந்திரம் எளிதாக உட்படுகிறதை குஜராத் வன்முறைகள் எடுத்துரைக்கின்றன என்று அந்த பகுதியில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இத்தகைய படுகொலைக்குத் திட்டம் தீட்டுபவர்களை, நடைமுறைப்படுத்துபவர்களை, ஆதரவளிப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாதா? குறைந்தபட்சம் அரசியல் ரீதியாக கூட தண்டிக்க முடியாதா? என்று வினவும் சித்தரிக்ககப்பட்ட படம் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், குஜராத் மாநில முதலமைச்சருக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்று தான் "ஆட்சியாளர்கள் ராஜதர்மத்தை கடைபிடிக்க வேண்டும். சமயம், இனம் காரணமாக வேறுபாடு காட்ட கூடாது" என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கூறும் வாசகமும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாசகம்
இந்த நடவடிக்கை குறித்து என்சிஇஆர்டி தனது செய்தியில், " கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பாடச்சுமையைக் குறைப்பது மிக முக்கியமானது. மேலும், அனுபவக் கல்வி, படைப்பாற்றல் கொண்ட திறனை வளர்த்தெடுக்க புதிய தேசியக் கல்விக் கொள்கை முனைகிறது. அந்த வகைகயில், பள்ளிக் கல்விக்கான பாடத் திட்டத்தைச் சீரமைக்க 6 முதல் 12ம் வகுப்புகளில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தது.
குஜராத் கலவரம்: மத்திய அரசின் தகவலின்படி இக்கொடிய வன்முறையினால் 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டும், 2458 பேர் காயமடைந்தும் 223 பேர் காணாமலும் போகினர் என்றுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.