இன்ஜினியரிங் காலேஜில் ஆர்ட்ஸ் & சயின்ஸ் படிப்புகளா? ராமதாஸ் கண்டனம்

பொறியியல் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்பையும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டால், அவற்றின் தரம் வீழ்ச்சி அடைவதைத் தவிர வேறு மாற்றம் நிகழாது என்கிறார் ராமதாஸ்.

இன்ஜினியரிங் காலேஜில் ஆர்ட்ஸ் & சயின்ஸ் படிப்புகளா? ராமதாஸ் கண்டனம்
ராமதாஸ்
  • News18
  • Last Updated: January 8, 2019, 10:16 PM IST
  • Share this:
பொறியியல் கல்லூரிகளில் அறிவியல் படிப்புகளை அனுமதிப்பது அபத்தம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பொறியியல் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளையும் சேர்த்து நடத்த அனுமதிக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அறிவித்திருக்கிறது. புதுமையான யோசனை என்ற பெயரில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ள இந்த யோசனை அபத்தமானது ஆகும். இது உயர் கல்வியில் தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தும்.


அறிவியல் படிப்பையோ, பொறியியல் படிப்பையோ மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படி ஒரு யோசனையை அனில் சகஸ்ரபுத்தே தெரிவிக்கவில்லை. மாறாக, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதால், சரிந்துவிட்ட தனியார் கல்லூரிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பொறியியல் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும் தான் இப்படி ஒரு யோசனையை அவர் கூறியுள்ளார்.

பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்துவது பற்றி யோசிக்க வேண்டிய ஓர் ஒழுங்குமுறை அமைப்பின் தலைவர் தனியார் கல்லூரிகளின் உரிமையாளர்கள் நிலையில் நின்று யோசித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரின் வழிகாட்டுதலில் பொறியியல் கல்வியின் எதிர்காலத்தை நினைத்தாலே கவலையாக உள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பொறியியல் கல்விக்கு வரவேற்பு இல்லை என்பது உண்மை தான். அதே நேரத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் திறமையான ஆட்கள் கிடைக்கவில்லை என்பது தான் வேலைவாய்ப்பு சந்தையின் குரலாக உள்ளது.பொறியியல் கல்வியின் தரம் குறைந்தததற்கு காரணமே, அக்கல்வி கடை சரக்காக மாறி, அதை விற்று அதிக லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது தான். இவற்றைத் தொடங்கியோரில் பெரும்பாலானோருக்கு கல்வி பற்றிய புரிதலும் இல்லை; பின்னணியும் கிடையாது. வணிக நோக்கத்துடன் கல்லூரிகள் நடத்தப்பட்டதால் தான் பொறியியல் கல்வியின் தரம் குறைந்தது. இப்போது பொறியியல் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்பையும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டால், அவற்றின் தரமும் வீழ்ச்சி அடைவதைத் தவிர வேறு மாற்றம் நிகழாது.

பொறியியல் கல்லூரிகளில் கலை -அறிவியல் பாடங்களையும் நடத்துவதற்கு அளித்துள்ள அனுமதியை தொழில்நுட்பக் கல்விக்குழு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாறாக, பொறியியல் கல்வியை மேம்படுத்துவதற்கான உத்திகளை வகுத்து, அவற்றை பொறியியல் கல்லூரிகள் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மற்றொருபுறம், பொறியியல் கல்லூரிகளில் கலை-அறிவியல் படிப்புகளை நடத்த தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Also watch

First published: January 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்