சிறுபான்மை மாணவர்களுக்கு அரசால் கல்வி உதவித்தொகை கடந்த ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 1 முதல் 8 வகுப்பு வரை வழங்கப்படும் பிரீ மெட்டிரிக் உதவித்தொகையை நிறுத்தம் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 1329.2 கோடி ரூபாய் 1 முதல் 10-ம் வரை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்டு வருமானம் 1லட்ச ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இனி 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாலும், மத்திய சமூகநல மற்றும் பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதையும் பின்பற்றி சிறுபான்மை மாணவர்களுக்கும் அதே முறையைப் பின்பற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாகச் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை குறித்த விவரங்கள்:
2021-2022 ம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விவரம்:
தமிழகத்தில் மாணவிகள் 2லட்சத்து 34 ஆயிரத்து 931 பேருக்கும் மாணவர்கள் 2 லட்சத்து 13 ஆயிரத்து 483 பேருக்கும் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 414 பேருக்கு 86 கோடியே 55 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் 2020-2021 கல்வியாண்டில் மாணவர்கள் 1 லட்சத்து 78 ஆயிரத்து 394 பேருக்கும் மாணவிகள் 2 லட்சத்து 2 ஆயிரத்து 955 பேருக்கும் மொத்தம் 3 லட்சத்து 81 ஆயிரத்து 349 மாணாக்கர்களுக்கு 76 கோடியே 96 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு செலவிடும் தொகை பெருமளவு குறைய உள்ளது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையினை நிறுத்தி இருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மத்திய அரசு சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி தொகையை நிறுத்தி இருப்பது உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என்னும் குற்றச் சாட்டுகளும் எழுந்துள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் மத்திய அரசின் நடவடிக்கைகள் சிறுபான்மை சமூகத்தினரை பல்வேறு வகைகளில் பாதிப்பிற்கு ஆளாகி வரும் நிலையில் தற்போது கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டிருப்பது சிறுபான்மை சமூகத்தினரை நசுக்கும் ஒரு நடவடிக்கை என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Scholarship, School students