Home /News /education /

தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடர்பாக பிரதமர் முக்கிய ஆய்வு

தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடர்பாக பிரதமர் முக்கிய ஆய்வு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பள்ளிக் குழந்தைகளுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் படிக்கக்கூடிய கலப்பு கல்வி முறையை அறிமுகம் செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்

  தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்படுவது குறித்து பிரதமர் நேற்று (07.05.2022) ஆய்வு செய்தார்.

  தேசிய கல்விக் கொள்கை 2020 தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்துவதில், இக்கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள அணுகுதல், சமத்துவம், உள்ளார்ந்த மற்றும் தரம் ஆகிய குறிக்கோள்களை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேற்றைய ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டார்.

  இதுகுறித்து இந்திய கல்வி கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

  தேசிய வழிகாட்டுதல் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பள்ளிக் கல்வியில், அங்கன்வாடிகளில், தரமான முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்வி, நிபுன் பாரத் (NIPUN Bharat), வித்யா பிரவேஷ், தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி மற்றும் மேம்பட்ட கற்றல் முடிவுகளை ஏற்படுத்த, கலை-ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி, பொம்மைகள் சார்ந்த கல்விமுறை போன்ற புதுமையான கல்விமுறைகள் பின்பற்றப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளின் அதிகப்படியான தொழில்நுட்ப வெளிப்பாட்டைத் தவிர்க்க, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய கலப்பு கற்றல்முறை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

  குழந்தைகள் அங்கன்வாடியிலிருந்து பள்ளிக்கூடங்களில் சேருவதால், அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படும் புள்ளிவிவரங்கள், பள்ளிக்கூட தரவுகளுடன் தடையற்ற முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப உதவியுடன் பள்ளிக் குழந்தைகளின் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். மாணவர்களிடையே கருத்தியல் திறனை உருவாக்க, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொம்மைகளைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

  ஆய்வுக்கூடங்கள் உள்ள இடைநிலைப் பள்ளிக்கூடங்கள், மண் பரிசோதனைக்காக தங்களது சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் யோசனை தெரிவித்தார்.

  உயர்கல்வியில் பல்துறை: 

  நெகிழ்வுத் தன்மையைப் பின்பற்றும் விதமாக சேர்க்கை – வெளியேறுதல் மற்றும் வாழ்நாள் முழுவதும் படிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதுடன், டிஜிலாக்கர் நடைமுறையில் கல்வி வங்கி தொடங்கப்பட்டிருப்பதும், மாணவர்கள் தங்களது சுய வசதிக்கேற்பவும், விருப்பப்படியும் படிப்பதை சாத்தியமாக்கியுள்ளதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

  வாழ்நாள் முழுவதும் படிப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், கற்போரிடையே சிக்கலான மற்றும் பல்துறை சிந்தனையை ஏற்படுத்தவும், பல்கலைகழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரே நேரத்தில் இரண்டு பாடப் பிரிவுகளை படிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

  தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National Higher Education Qualification Framework  -NHEQF) உருவாக்கும் பணிகளும் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது.  தற்போதைய “இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பாடத்திட்ட கட்டமைப்பு மற்றும் வரவுமுறை“  (Curriculum Framework and Credit System for Undergraduate Programme)உயர்கல்வி தகுதி கட்டமைப்புக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.

  பல் வகைக் கல்வி: 

  பள்ளிக்கூடங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில், ஆன்லைன், திறந்தவெளி மற்றும் பல்-வகை கற்றல் முறை ஊக்குவிக்கப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட கற்றல் இழப்புகளைக் குறைக்க, இந்த முயற்சி பெரிதும் உதவியதுடன், நாட்டின் தொலைதூர மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கும் கல்வியை கொண்டுசேர்ப்பதிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

  SWAYAM, DIKSHA, SWAYAM PRABHA, இணைய ஆய்வகங்கள் மற்றும் இதர ஆன்லைன் ஆதார இணையதளங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதுடன், மாணவர் சேர்க்கையையும் அதிகரித்துள்ளன. இத்தகைய இணையதளங்கள், படிப்பு உபகரணங்களை, செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான ஒளிரும் மொழிகள் உட்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கு ஒலி வடிவிலும் வழங்குகின்றன.

  மேற்குறிப்பிட்டவை தவிர, திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கற்றல் மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள் ஒழுங்குமுறை விதிகளையும் பல்கலைகழக மானியக்குழு யுஜிசி வெளியிட்டுள்ளது. இதன்படி,59 உயர்கல்வி நிறுவனங்கள், 351 முழுமையான ஆன்லைன் பாட நிகழ்ச்சிகளையும், 86 உயர்கல்வி நிறுவனங்கள் 1081 திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கற்றல் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றன. ஒரு நிகழ்ச்சியில் வழங்கப்படும் ஆன்லைன் வழி பாடத்தின் அளவும் 40% குறைக்கப்பட்டுள்ளது.

  School Education

  புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் ஸ்டார்ட் அப்

  ஸ்டார்ட்-அப் மற்றும் கண்டுபிடிப்பு சூழலை ஊக்குவிக்க, 28 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன்பிரதேசங்களின் உயர்கல்வி நிறுவனங்களில் 2,774 நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில்கள் (Institution’s Innovation Councils) அமைக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்த கண்டுபிடிப்பு சாதனை அடிப்படையில் அடல் கல்விநிறுவன தரவரிசைப்படுத்துதல் (ARIIA), 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டடது. ARIIA-வில் 1438 நிறுவனங்கள் பங்கேற்றன. வெறும் பாடமாகப் படிப்பதற்குப் பதிலாக, பரிசோதனைகளுடன் கூடிய கல்வியை ஊக்குவிக்க, சிந்தனை வளர்ப்பு, மதிப்பீடு மற்றும் பயன்பாடு (IDEA) ஆய்வங்களை அமைக்க, தொழில்துறை பங்களிப்புடன் 100 நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு நிதியுதவி அளிக்கிறது.

  இந்திய மொழிகள் ஊக்குவிப்பு

  ஆங்கில அறிவு குறைபாடு, எந்தவொரு மாணவரும் கல்வித் தகுதி பெறுவதை தடுக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, கல்வி மற்றும் பரிசோதனையில் பலமொழி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த குறிக்கோளை மனதிற்கொண்டு, மாநிலங்கள், அடிப்படை கல்விக்காக இருமொழி / மும்மொழி பாடப்புத்தகங்களை வெளியிடுவதோடு, DIKSHA தளத்திலும் 33 இந்திய மொழிகளில் பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய திறந்தவெளிப் பள்ளியும், இடைநிலைக் கல்வி அளவில், இந்திய ஒளிரும் மொழியை அறிமுகப்படுத்தியுள்ளது.

  TN Morning Breakfast Scheme: காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

  தேசிய தேர்வு முகமையும் 13 மொழிகளில், ஜேஇஇ நுழைவுத்தேர்வை நடத்தியுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழிபெயர்ப்பு செயலியை உருவாக்கியிருப்பதோடு, பாடப் புத்தகங்களும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. ஹிந்தி, மராத்தி, வங்காளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்கள் எழுதும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2021-22 முதல் 10 மாநிலங்களில் உள்ள 19 பொறியியல் கல்லூரிகளில் 6 இந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன. பிராந்திய மொழிகளில் கூடுதலாக 30/60 மேலதிக எண் இருக்கைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களில், பிராந்திய மொழிகளில் 50% வரை சேர்த்துக் கொள்ளவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அனுமதி அளித்துள்ளது.  தேசிய கல்விக்கொள்கை 2020-ன் பரிந்துரைகளின்படி, இந்திய அறிவாற்றல் முறை ஊக்குவிக்கப்படுகிறது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவில், ஒரு இந்திய அறிவாற்றல் முறை பிரிவும் (Indian Knowledge System), நாட்டின் பல்வேறு பகுதிகளில் 13 இந்திய அறிவாற்றல் முறை மையங்களும் திறக்கப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Salanraj R
  First published:

  Tags: New Education Policy

  அடுத்த செய்தி