சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தலைமை விருந்தினராக 70 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் பங்கேற்றுள்ளார். பிரதமர்
மோடி பங்கேற்று தலைமை உரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு 10 கிராம் எடை கொண்ட தங்கப்பதக்கம், சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கினார். இந்நிகழ்வில் முதலமைச்சர்
ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ், சிண்டிகேட் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் வரவேற்பு உரை ஆற்றிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, " தற்காலத்தில் ஆண்களை விட பெண்களே உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்ற்னர். உதாரணமாக, தற்போது இந்த பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெறுபவர்களில் பெண்களே அதிகம். முன்னதாக, உயர்கல்வி சேர்க்கையில் நுழைவுத் தேர்வை முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி ரத்து செய்து அறிவித்தார். இதன் காரணமாக, உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியது.
பெண்கள் உயர்கல்வியை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்தார்.
மேலும், தொழிற்கல்வி படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாற்றம் தான் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று அமைச்சர் பொன்முடி தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.
முன்னதாக, இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, நேற்று ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.இந்த ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் 2022, ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.