42nd Convocation of Anna University: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர்
மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் 69 பேருக்கு தங்கப்பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
தமிழில் வணக்கம் எனக் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, “ பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கான எதிர்காலத்தை நீங்கள் ஏற்கனவே மனதளவில் கட்டியெழுப்பி இருக்கக் கூடும். எனவே, இன்றைய நாள் சாதனைகளின் நாள் மட்டுமல்ல, உயர் லட்சியங்களை அடைவதற்கான நாளாகும்”, என்றார்.
இன்றைய இளைஞர்கள் நாளை இந்தியாவின் உண்மையான வடிவத்தை உருவாக்கப்போகும் தலைவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, " பெற்றோர், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் ஆதரவையும் பங்களிப்பு மற்றும் ஆதரவையும் குறிப்பிட்டார்.
இந்த பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பங்களிப்பை குறிப்பிட்டு பேசிய மோடி, " இந்த நாட்டிற்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அவரின் அடிச்சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பங்களிப்பு குறித்து பேசிய அவர், " கொரோனா பெருந்தொற்று இதுவரை கண்டிராத பாதிப்பாகும். ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் இந்த நெருக்கடியை எவரும் சாதாரணமாக கையாள இயலாது. இது அனைத்து நாடுகளையும் சோதனைக்கு உட்படுத்தியது. நாம் எவ்வளவு எதிர்நிலைகளை சந்தித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிர்கொண்டது, அதற்காக விஞ்ஞானிகளுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி கூறவேண்டும்" என்று தெரிவித்தார்.
தொழில்நுட்ப கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் முக்கிய மாற்றங்களுக்கு மாணவ சமுதாயம் தயாராக வேண்டும் என்று குறிப்பிட்டு பேசிய அவர், "தொழில்நுட்பம் காரணமான இடையூறுகளின் சகாப்தத்தில் (tech- led disruption's) 3 முக்கியமான அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன.
இதையும் வாசிக்க: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
முதல் அம்சம் என்பது தொழில்நுட்பத்திற்கான ஈர்ப்பாக உள்ளது. தொழில்நுட்ப பயன்பாட்டில் சாதகமான உணர்வு வளர்ந்து வருகிறது. பரம ஏழைகளும் கூட இதனை பயன்படுத்துகிறார்கள். இரண்டாவது அம்சம் என்பது துணுச்சல் நிறைந்தவர்களிடம் (risk Takers ) நம்பிக்கை கொள்வது. ஏற்கனவே ஒரு ஆணோ, பெண்ணோ தன்னை தொழில்முனைவோர் என்று சொல்லிக்கொள்வதில் சிரமம் இருந்தது. முன்பெல்லாம், மாத சம்பளத்துடன் வாழ்க்கையின் நிலைத்தன்மையை அடையுங்கள் என்று மற்றவர்கள் கூறுவது உண்டு. ஆனால், நிலைமை தற்போது தலைகீழ் மாற்றம் கொண்டுள்ளது.
3-வது அம்சம் என்பது சீர்திருத்தத்திற்கான மனோநிலை. வலுவான அரசு என்பதன் பொருள் அது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது என்ற கருத்து ஏற்கனவே இருந்தது. ஆனால் இதனை நாங்கள் மாற்றியிருக்கிறோம்.
வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடைமுறையின் காரணத்தை கட்டுப்படுத்துவது.வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இளைஞர்களைப் பொறுத்து தான் நாட்டின் வளர்ச்சி அமையும் என்று குறிப்பிட்ட அவர், "
உங்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி. உங்களின் கற்றல் இந்தியாவின் கற்றல். உங்களின் வெற்றி இந்தியாவின் வெற்றியாகும்" என்று தெரிவித்தார். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.