மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்கக்கூடாது என பிரதமர் நரேந்திர
மோடி தெரிவித்துள்ளார்.
பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த நிகழ்வுக்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.
தேர்வுகள் குறித்தும் அதுசம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். கடந்த, 2021ம் ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிலையில், 5வது ஆண்டாக இன்று டெல்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர் உரையாற்றியதாவது, நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அழுத்தத்தின் கீழ் இருப்பதாக மாணவர்கள் உணரக்கூடாது.
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்க கூடாது. அதேபோல், பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது புகுத்தக்கூடாது. அவர்கள் சுதந்திரமாக தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்.
தேர்வுகளின் போது மாணவர்கள் பயத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நண்பர்களை போன்றே நாமும் இருக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் எதைச் செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள், நீங்கள் அனைவரும் உங்கள் தேர்வை திருவிழா மனநிலையில் சந்திக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், தேசியக் கல்விக் கொள்கை NEP 2020ன் பல்வேறு நன்மைகள் விரைவில் நமக்கு தெரியவரும். அதனால், தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ நடைமுறைப்படுத்துமாறு பள்ளிகள், கல்வித் துறைகள் மற்றும் ஆசிரியர்களை நான் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் நம் மாணவர்கள் அந்த கொள்கையின் பலன்களைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.