Kendriya Vidyalaya Education: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சராசரியாக 10% மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு எம்பி டி.ஆர் பாரிவேந்தர் மக்களைவயில் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், " கேந்திரிய வித்யாலாயா கல்வி நெறிமுறையின் 112வது விதி எண் கீழ், 15 கேந்திரிய பள்ளிகளில் உள்ள 6589 மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை பயின்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) உருவாக்கிய பாடத்திட்டங்களை கேந்திரியக் கல்வி நிலையங்கள் பின்பற்றுகின்றன. தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை NCERT உருவாக்கி வருகிறது. அதன் அடிப்படையில், கற்பதற்கான பொருட்கள், பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மொழி பன்முகத்தன்மையால் கிடைக்கும் படைப்பாற்றலும் மேன்மையை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்திகிறது என்றும் தெரிவித்தார் .
மாநிலத்தில் செயல்பட்டு வரும் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கிட்டத்தட்ட சுமார் 63809 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவரக்ளில் சுமார், 10.3% மாணவர்கள் மட்டுமே தமிழ் மொழி பாடத்தை விரும்பிக் கேட்டு வருகின்றனர்.
விதி எண் 112 சொல்வது என்ன?
கேந்திரிய வித்யாலயா கல்வி நிலையங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் பயிற்று மொழியாக உள்ளன. இருப்பினும், கூடுதல் முயற்சியாக, 20 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பி கேட்டுக் கொண்டால், தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படும்.
இதற்காக, துணை ஆணையர் ஒப்புதல் பெற்று, தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த தமிழ் பயிற்றுவிப்பும்கூட, 6ஆம் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை தான் நடைபெற வேண்டும். தேவையிருக்கும் பட்சத்தில், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு நீட்டிக்கப்படலாம். வாரத்தில் 2, 3 மணி நேர வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கிறது.
இருப்பினும், புதிய கல்விக் கொள்கையின் பன்மொழி மற்றும் மொழியின் ஆற்றல் ( Multilingualism and the power of language) என்ற பகுதி, குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் , ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் , தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி , பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று வரையறுக்கிறது.
மேலும், இந்த 112வது விதி எண், தமிழ் பாடத்தை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கடும் நிபந்தனைகளை விதிப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், 1ம் வகுப்பு முதல் தமிழ் மொழியைக் கற்பிக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBSE School lesson, Tamil