• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • திறந்தநிலை, தொலைதூரக் கல்வி முறையில் படிக்க விரும்புபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியை என்ன?

திறந்தநிலை, தொலைதூரக் கல்வி முறையில் படிக்க விரும்புபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியை என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திறந்தநிலைக் கல்வி, தொலைதூரக் கல்வி முறையில் கல்வி கற்க விரும்புபவர்கள் அடிப்படையாக சில விஷயத்தை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.

  • Share this:
அஞ்சல் வழிக் கல்வி எனத் தொடங்கப்பட்டபோது கல்வி நிறுவனம் மற்றும் படிப்பவருக்குமான தொடர்பு அஞ்சல் வழியாகவே நிகழ்ந்தது. அதனாலேயே, அதனை அஞ்சல் வழிக் கல்வி என்றார்கள். ஆனால், காலப்போக்கில் அந்த நிலை மாறிவிட்டது. வாரத்திற்கு ஒன்று அல்லது 2 நாட்கள் வகுப்பறையிலோ, தொழில்நுட்ப முறையிலோ திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் எல்லா கல்வி நிறுவனங்களுமே தொலைநிலைக் கல்வி முறை போன்றுதான் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

திறந்தநிலை & தொலைநிலைக் கல்வி என்றால் என்ன?

திறந்தநிலை கல்வி முறையில் பள்ளிக்கே செல்லாதவர் கூட படிக்க முடியும். முன்னதாக, பட்டம் கூட பயிலலாம் என்ற சூழல் இருந்தது. ஆனால், அதில் பல சிக்கல்கள் எழுந்ததன் காரணமாக, அடிப்படை தகுதியின் அடிப்படையிலேயே பட்டம், பட்டயம் அல்லது சான்றிதழ் படிப்பு ஆகியவற்றில் ஒன்றை படிக்கலாம். +2 படித்தவர்கள்தான் பட்டம் பயிலக் கூடிய சூழல் தற்போது திறந்தநிலை கல்வியிலும் உருவாகியுள்ளது. இந்த திறந்த நிலை கல்வி முறையை நாடு முழுவதும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமும், தமிழகத்தில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் வழங்குகிறது.

தொலைதூர கல்வி என்பது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் மட்டுமே வழங்க முடியும். தனியார் பயிற்சி மையங்கள் மூலமாக திறந்தநிலைக் கல்வியை தர இயலாது. சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றீசல் போலத் தோன்றிய தனியார் பயிற்சி மையங்கள், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வியை வழங்கி வந்தன. இதில் பல முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, பல்கலைக்கழக மானியக் குழு அதற்கு தடை விதித்தது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், தமிழகத்திற்குள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை வழங்க முடியும். அதன் பயிற்சி மையத்தை வேறு மாநிலங்களில் நிறுவக் கூடாது என்றும் யூ.ஜி.சி கூறிவிட்டது.

தொலைநிலை முறையில் படிக்க முடியாத படிப்புகள்

மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண், கட்டடக்கலை, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், நர்சிங், பார்மசி, பி.எட் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வி முறையில் படிக்க முடியாது. அதாவது செய்முறை சார்ந்த பயிற்சி அவசியம் எனக் கருதப்படும் தொழில்முறை படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் பெற முடியாது. அப்படி பெறப்படும் பட்டம் செல்லுபடியாகாது. ஆனால், இப்படிப்புகளைச் சார்ந்த திறன் மேம்பாட்டு பட்டய, சான்றிதழ் படிப்புகளை Distance முறையில் படிக்கலாம்.

திறந்தநிலை & தொலைநிலை முறை யாருக்கு பலனளிக்கிறது?

பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள், மீண்டும் படிக்க வேண்டும் என நினைத்தால், தொலைநிலைக் கல்வி முறை நல்ல வழி. புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்களும், தான் செய்யும் தொழில் சார்ந்த முறையான படிப்பை படிக்க வேண்டும் என நினைப்பவர்களும் கூட இந்த கல்வி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு மட்டுமல்ல, அரசுப் பணிக்குச் செல்வதற்கான போட்டித் தேர்வுகளில்தான் முழு கவனமும் செலுத்த வேண்டும் என நினைக்கும் பலருக்கும், தொலைநிலைக் கல்வி முறை கைகொடுக்கிறது. அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் பதவி உயர்வுக்குத் தேவையான படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலமாகவே படிக்கின்றனர். இப்பட்டியலில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், துணை வேந்தர்கள் கூட உண்டு. அதனால், அதன் நம்பகத்தன்மையில் சந்தேகம் தேவையில்லை என்கின்றனர் பல்கலைக்கழகத்தினர்.

ஆனால், தனியார் நிறுவனங்கள் சில, தொலைநிலை முறையில் படிப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என தங்களுடைய ஆள்தேர்வு விளம்பரங்களிலேயே தெரிவிக்கின்றன. தொலைநிலையில் படித்தவர்கள் முறையான பயிற்சிகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்ற எண்ணமே அதற்குக் காரணம் என்றும், அப்படிக் கூறும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தி வருவதாகவும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல இயக்குநர் பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார்.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம்(IGNOU) குறித்த விவரங்கள்

தேசிய பல்கலைக்கழகமான IGNOU-வில் 200க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. IGNOU-ற்குக் கீழ் 21 பயிற்சிப் பள்ளிகள், 56 மண்டல மையங்கள், 2,000 பயில்வோர் உதவி மையங்கள் செயல்படுகின்றன. 1985ல் 4,000-ஆக இருந்த IGNOU-வின் மாணவர் எண்ணிக்கை, தற்போது 30 லட்சமாக உள்ளது. UAE, Kuwait, Oman, Bahrain, Ethiopia, Singapore, SriLanka, Afganistan நாடுகளில் IGNOU-வின் பயிற்சி மையங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களை www.ignou.ac.in-ல் அறிந்துகொள்ளலாம். இணையவழியில் சுயமாக பயில்வதற்கான பாடங்களை e-GyanKoshல் பெறலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடர்பான விவரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன்னுடைய எதிர்காலத் திட்டம் என்ன என்பதை முடிவு செய்துவிட்டால், அதன் அடிப்படையில் தன்னுடைய பட்டப்படிப்பை கல்லூரிக்குச் சென்று படிக்கலாமா? தொலைநிலைக் கல்வி முறையில் படிக்கலாமா? என்பதை ஒருவர் முடிவு செய்யலாம். அதே சமயம், உரிய காலத்தில் படிக்காமல் விட்டுவிட்டோம். அதனால்தான் இவ்வளவு கஷ்டமும் என நொந்து கொள்பவர்கள், திறந்தநிலைக் கல்வி குறித்த ஆய்வுகளைத் தொடங்கி புதிய வழியை வகுத்துக் கொள்ளலாம். அதுவே, இக்கல்வி முறையின் நோக்கமும் கூட

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: