ஹோம் /நியூஸ் /கல்வி /

பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகளை இடையூறு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் - கல்வியாளர்கள்

பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகளை இடையூறு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் - கல்வியாளர்கள்

ஆன்லைன் தேர்வுகள்

ஆன்லைன் தேர்வுகள்

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகளை மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் பெரும்பாலான மாநிலங்களில் ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் பொறியியல் இறுதி செமஸ்டருக்கான தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் அண்மையில் நடத்தியது. பல்வேறு பகுதிகளில் இணையவசதி கிடைக்காததாலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.

  இந்நிலையில், பொறியியல் படிப்புகளில் 3, 5 மற்றும் 7வது செமஸ்டர்களுக்கான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் இணையதள வசதி முறையாக கிடைக்காததால், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படுவதாகவும், இதற்கு தீர்வு காணும் வகையில் முறையான திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் வகுக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

  ஆன்லைனில் எளிதாக தேர்வு எழுதும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள், இணைய வசதி இல்லாத கிராமங்களில், அருகே உள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இணைய சேவை இல்லாமை, தொழில் நுட்ப கோளாறு போன்றவற்றால் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சாய்ஸ் அடிப்படையில் வினாக்களை கேட்டால், மாணவர்களுக்கு தேர்வு எளிதாக இருக்கும் என்றும் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

  மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பொறியியல் ஆன்லைன் தேர்வுகளை சிக்கலின்றி நடத்த வேண்டும் என்பதே, கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vijay R
  First published:

  Tags: Online class