மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை தேர்விலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 முதல் நிலைத் தேர்விலும் துணை ராணுவப் படைகள் குறித்து கேள்விகள் இடம்பெறுவது வழக்கம் .
தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த சிறப்புத் தொடர் இருக்கும் என்று நம்புகிறோம்.
தேசிய பாதுகாப்புப் படை:
தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) கடினமான பணிகளை மேற்கொள்ளும் படையாகும். இந்திய பாதுகாப்பு அமைப்பில் என்எஸ்ஜி முக்கிய பங்கை ஆற்றுகிறது.
1986ல் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி இப்படை அமைக்கப்பட்டது. தொழிற்நுட்பங்களுடன் கைத்தேர்ந்த யுக்தியுடன் உள்நாட்டு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இப்படை ஈடுபடுகிறது. இங்கிலாந்தின் எஸ்.ஏ.எஸ் (SAS ) மற்றும் ஜெர்மனியின் ஜி.எஸ்.ஜி-9 (GSG-9) படைகளை ஒத்த அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14,500 படை வீரர்களைக் கொண்டுள்ளது.
முந்தைய கட்டுரைகளை படிக்க:Border Security Force: எல்லை பாதுகாப்புப் படை என்றால் என்ன? இந்தோ - தீபெத்தின் எல்லைப் பாதுகாப்புப் படை என்றால் என்ன? எதற்காக ஏற்படுத்தப்பட்டது? |
பணி சார்ந்த படையான (Task Oriented Force) இப்படையில், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய சேமக் காவல் படை மற்றும் மாநில காவல்ப்படையினருடன் உருவாக்கப்படும் சிறப்பு அதிரடிப் படை மற்றும் சிறப்பு ரேஞ்சர் குழு என இரண்டு துணைக் கூறுகள் உள்ளன. இந்தியக் காவல் பணி தலைமையில் (இந்தியன் போலிஸ் சர்வீஸ் -IPS) இயங்கும் இப்படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. கருப்புப் பருத்தி உடையும், பலக்லாவா அல்லது தலைக்கவசம் கொண்ட இப்படையினரை கருப்புப் பூனை என்றும் அழைப்பதுண்டு.
ஒரு பிரத்யேக பயங்கரவாத எதிர்ப்புப் படையாக, மிகவும் தவிர்க்க முடியாத, சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே இப்படை பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதம் சார்ந்த சம்பவங்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை துல்லியமாக எதிர்கொள்வது இந்த படையின் முதன்மையான நோக்கமாகும். தீவிரவாதத்துக்கு எதிராக இத்தகைய தாக்குதல்களை மாநில காவல் படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளிடமிருந்து எதிர்பார்க்கமுடியாது.
இருப்பினும், செல்வாக்கு மிகுந்த முக்கியஸ்தர்களுக்கு (VIP ) தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கும் படையாகவே இது பார்க்கப்பட்டு வந்ததது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு, உயரடுக்கு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்புப் படையாக அதன் அசல் பாத்திரங்களில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதற்காக விஐபி பாதுகாப்புப் பணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதன் தத்துவம்: நெருக்கடியான தருணங்களில் விரைவான, ஒருங்கிணைந்த எதிர்தாக்குதலை அளிப்பது தான் இதன் தாரக மந்திரமாகவும்.
நிலம், கடல் மற்றும் வான்வழி கடத்தல்களை எதிர்கொள்வது உட்பட, பயங்கரவாத எதிர்ப்பு பணிகளை நடத்துவதற்கு இப்படை பயிற்சி பெற்றுள்ளது; வெடிகுண்டு அகற்றல் (தேடுதல், கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்கச் செய்தல்) வெடிகுண்டு வெடிப்பிற்கு பிறகான விசாரணை குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயங்கரவாதிகளுடன் மோதல் பணயக்கைதிகளை மீட்டல் போன்ற முக்கியப் பணிகளை இப்படை மேற்கொள்கிறது.
முக்கிய நிகழ்வுகள்:
1984-ல் அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் இந்திய ராணுவம் மேற்கொண்ட புளூஸ்டார் நடவடிக்கைக்குப் (Operation Blue Star) பின்னணியில் தான் தேசிய பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளிலும் இருந்தும் நாட்டைக் காப்பாற்ற இப்படை எப்போது தயாராக வைக்கப்பட்டுளள்ன.
ஐ .சி 427 என்றழைக்கப்படும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், 1993ம் ஆண்டு, 141 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்டபோது, இப்படை வெற்றிகரமாக எதிர்த்தாக்குதலை நடத்தை பயணிகளை மீட்டது.
2008 மும்பை தாக்குதலின் போது, தேசிய பாதுகாப்புப் படை தாஜ் ஓட்டலில் ஆபரேஷன் பிளாக் டொர்னாடோ மூலமாக மீதமுள்ள தீவிரவாதிகளை அகற்றித் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தது.
2016ம் ஆண்டு இந்திய மாநிலம் பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் வான் படை நிலையத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை தேசிய பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.