இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு கடந்த மாதம் 17ம் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 95% பேர் தேர்வில் பங்கேற்றனர். பொதுவாக, நீட் தேர்வுக்குப் பிந்தைய செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் வெளியிடும் பணி ஒன்றரை மாதங்களில் தொடங்கும். எனவே, இம்மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டு | தேர்வு நடைபெற்ற நாள் | தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் |
2021 | செப்டம்பர் 12 | நவமபர் 1 |
2020 | செப்டம்பர் 13 | அக்டோபர் 16 |
2019 | ஏப்ரல் 15 | ஜூன் 5 |
2018 | மே 6 | ஜூன் 4 |
NEET OMR ANSWER SHEET DISPLAY:
நீட் தேர்வுக்குப் பின், தேர்வரின் OMR விடைத்தாளையும், இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகளையும் தேசிய தேர்வு முகமை வெளியிடும். இதன்மூலம், விடைத்தாளில் நிரப்பிய கேள்விகள் அனைத்தும் இயந்திரம் மூலம் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள முடியும்.
இந்த மதிப்பீட்டில் ஏதேனும் குறை இருந்தால், முகமைக்கு தேர்வர்கள் தெரியப்படுத்தலாம். இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200-வீதம் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்.
இதையும் வாசிக்க: மருத்துவம்,பொறியியல் என அனைத்து பாடங்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு - யுஜிசி பரிசீலனை
நீட் விடைக் குறிப்பு: அதேபோன்று, நீட் தேர்வின் தற்காலிக விடைத் தொகுப்பு நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தெரியப்படுத்த தேர்வருக்கு வாய்ப்பளிக்கப்படும். குறைகளை இணைய வழியில் தெரிவிக்க ரூ.200- வீதம் (குறை ஒன்றுக்கு) கட்டணமாக செலுத்த வேண்டும்.
பாட வல்லுநர்களை கொண்டு குறைகள் சரிபார்க்கப்படும். குறை கண்டறியப்பட்டால், தொடர்புடைய விடைகள் மாற்றம் செய்யப்படும்.
நீட் கட் ஆப் மதிப்பெண்:
அனைத்திந்திய தரவரிசை பட்டியலின் உச்ச மதிப்பெண் அடிப்படையில் குறைந்தபட்ச மதிப்பெண் விழுக்காடு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, கடந்த 2018ம் ஆண்டு பொது பிரிவினருக்கு குறைந்தபட்சம் மதிப்பெண் விழுக்காடு(per centile) 50% ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, தரவரிசைப் பட்டியலின் உச்ச மதிப்பெண் அடிப்படையில் பொது பிரிவு தேர்வரின் குறைந்த பட்ச மதிப்பெண் 119 - 691 என்ற வரம்பில் நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடியினர் வகுப்பினருக்கான 40% விழுக்காட்டாக குறைந்த பட்ச மதிப்பெண் 96 - 118 என்ற வரம்பில் நிர்ணயிக்கப்பட்டது.
பொது பிரிவினர்(50th per centile) | ஓபிசி/எஸ்சி/எஸ்டி(40th Per centile) | |
2018 | 119 - 691 | 96 - 118 |
2019 | 134 - 701 | 107-133 |
2020 | 147 - 720 | 113 - 146 |
2021 | 138- 720 | 108 - 137 |
இதனடிப்படையில், அனைத்து இந்திய 15% இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் மற்றும் மாநில தரவரிசைப் பட்டியலை தேசிய தேர்வு முகமை தயாரிக்கும்.
தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணைய தளத்தை அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet, Neet Exam, NEET Result