மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு - அமைச்சரவை ஒப்புதலும், ஆளுநர் பரிந்துரையும்...! ஒரு பகுப்பாய்வு

மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு - அமைச்சரவை ஒப்புதலும், ஆளுநர் பரிந்துரையும்...! ஒரு பகுப்பாய்வு

கோப்புப்படம்

நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு இயற்றிய சிறப்பு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

  • News18
  • Last Updated :
  • Share this:
2016-2017 ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சியால் அந்தாண்டு மட்டும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்பட்டது. பின்னர், 2017 ஜனவரி 31 அன்று அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சட்ட முன்வடிவை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

மேலும், நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை விளக்கி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், நீட் தேர்வு அறிமுகமான பின்னர் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேருவது குறைந்து வந்த நிலை தொடர கூடாதென முடிவெடுத்தது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு.

சட்டசபையில் கடந்த 2020 மார்ச் 21 அன்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் உதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறை பள்ளிகளில் 1 முதல் 12 -ம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்தார்.

இந்த சட்டத்தை இயற்றுவதற்கு தேவைப்படும் பரிந்துரைகளை அரசுக்கு வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், அரசுப்பள்ளி மாணவர்களின் சமூக, பொருளாதார நிலையினை ஆராய்ந்து 10% உள் ஒதுக்கீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதனை தொடர்ந்து, கடந்த 2020 ஜூன் 15 அன்று அமைச்சரவை கூடி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சிறப்பு சட்டம் குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்த ஆளுநர், சட்டத்தில் சில திருத்தங்களை அரசுக்கு பரிந்துரைத்தார். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று, பின்னர் 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் அது.

கடந்த ஜூலை 14 அன்று மீண்டும் அமைச்சரவை கூடிய போது, அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கும் 7.5 % சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய மருத்துவர் ரவீந்திரநாத்,"7.5 சதவிகிதத்தை 10 ஆக உயர்ததுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி மையங்கள் தரம் மேம்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு அதிக பயிற்சி வழங்க வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் தங்கும் விடுதியுடன் கூடிய பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும்" என்றார்.

ரவீந்திர நாத்


அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கூறுகையில்,"நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழக அரசு இயற்றி குடியரசுதலைவருக்கு அனுப்பி வைத்த சட்டத்துக்கு இதுவரை உரிய பதில் இல்லை. நீட் தேர்வால் 1 சதவிகிதத்திற்கும் குறைவான கிராமப்புற மாணவர்களே மருத்துவ படிப்பில் சேரும் நிலை இருந்தது.அரசு இயற்றியுள்ள சிறப்பு சட்டம் மூலம், ஆண்டு தோறும் 500 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.

வைகை செல்வன்


ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரி பரந்தாமன், "ஜல்லிக்கட்டுக்கு விலக்கு கோரி தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு மறுநாளே ஒப்புதல் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வுக்கு மட்டும் ஏன் ஒப்புதல் தர மறுக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

மேலும், "நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் சம்பந்தம் இல்லை.நீட் தேர்வில் விலக்கு கோரி 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் தரவில்லை.எனவே, விலக்கு பெறுவதற்கு உச்சநீதிமன்றம் தடையில்லை. மத்திய அரசு தான் தடையாக இருக்கிறது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கோரிக்கை வைத்தால், விலக்கு பெற முடியும்" என தெரிவித்தார்.

ஹரி பரந்தாமன்


தமிழக அரசு இயற்றியுள்ள சிறப்பு சட்டத்துக்கு விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார். அதன்மூலம், நெடுங்காலமாக தங்கள் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் மருத்துவர் கனவு காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் எண்ணற்ற ஏழை, எளிய மாணவர்கள்.
Published by:Sankar A
First published: