NEET | நீட் விடைத்தாள் மோசடி... 40 நாட்களுக்குப்பிறகு சிக்கிய மாணவி..

Youtube Video

நீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தீட்சாவை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்குப் பதிவாகி, 40 நாட்கள் கழித்து மாணவி சிக்கியது எப்படி?

  • Share this:


    நீட் தேர்வில் சான்றிதழ் மோசடி செய்த மாணவி தீட்சா ஒரு வழியாகக் கைதாகியிருக்கிறார். புகார் பதிவாகி சரியாக 40 நாட்கள் கழித்து அவர் சிக்கியுள்ளார். பெங்களூருவில் பதுங்கியிருந்த மாணவி போலீசாரிடம் சிக்கியது எப்படி?

    2020 -2021ம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் டிசம்பர் 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீட்சா கலந்து கொண்டார். நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்து உள்ளதாக அவர் சமர்ப்பித்த சான்றிதழை பரிசோதித்தபோது, அது போலி எனத் தெரியவந்தது.

    நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததும், ஹ்ருத்திகா என்ற மாணவியின் சான்றிதழில் பெயரையும் சீரியல் எண்ணையும் மாற்றி போலி சான்றிதழ் சமர்ப்பித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, 6 பிரிவுகளின் கீழ் மாணவி, அவரது தந்தை பாலச்சந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    பெங்களூருவில் பதுங்கியிருந்த மாணவியின் தந்தை பாலச்சந்திரன், ஜனவரி 1ம் தேதி கைது செய்யப்பட்டார். பல் மருத்துவரான பாலச்சந்திரன் தன் மகளை எப்படியாவது மருத்துவப் படிப்பில் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நீட் தேர்வில் தீட்சா 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் நண்பர்களிடம் புலம்பியுள்ளார்.

    அப்போது தான் இடைத்தரகர் ஜெயராமனின் அறிமுகம் பாலச்சந்திரனுக்கு கிடைத்தது. அவர் போலி சான்றிதழ் மூலம் தீட்சாவுக்கு நீட் படிப்பில் சேர்த்து விட முடியும் என நம்பிக்கை ஊட்டி முன்பணமாக 25000 ரூபாய் வாங்கியுள்ளார்.

    மேலும் படிக்க...தரமற்ற தங்க நாணயம் பரிசா?- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சர்ச்சை

    சொன்னபடி இரண்டே நாட்களில் போலி சான்றிதழையும் போலி அழைப்பு சான்றிதழையும் தயாரித்துக் கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், பெங்களூருவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மாணவி தீட்சாவை, போலீசார் திங்களன்று கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிப்ரவரி 1ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மாணவி தீட்சா புழல் சிறையில் அடைத்தனர்.





    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: