நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - தலைமறைவாக உள்ள மாணவர்களைப் பிடிக்க தனிப்படை

மனஅழுத்தம் காரணமாக கல்லூரியிலிருந்து விலகுவதாக 9-ம் தேதியிட்ட கடிதத்தை உதித் சூர்யா வழங்கியுள்ளார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - தலைமறைவாக உள்ள மாணவர்களைப் பிடிக்க தனிப்படை
மாணவர் உதித் சூர்யாவும் தேர்வெழுதிய மாணவர் புகைப்படமும்
  • News18
  • Last Updated: September 19, 2019, 7:33 AM IST
  • Share this:
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக சென்னையை சேர்ந்த மாணவர் மீது காவல் நிலையத்தில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, தலைமறைவாக உள்ள மாணவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கியுள்ளன. தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதில் சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் சேர்ந்திருப்பதாக கல்லூரி முதல்வருக்கு இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்த 4 பேராசிரியர்கள் கொண்ட விசாரணைக் குழுவை, மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அமைத்தார். இந்தக் குழு நடத்திய விசாரணையில், உதித் சூர்யாவின் தந்தை, சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது.


உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உதித் சூர்யா சென்னையில் இரண்டு ஆண்டுகளாக தேர்வில் கலந்துகொண்டு தோல்வியடைந்ததாகவும், பின்னர் மும்பையில் இந்த ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவித்தனர். பல கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர்.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் உள்ள படமும், மாணவரின் உண்மையான தோற்றமும் வேறு வேறாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்தத் தேர்வில் 385 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் குறித்து மருத்துவக் கல்வி இயக்ககத்தில் கல்லூரி முதல்வர் அறிக்கை அளித்தார். மேலும், மாணவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

 ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றது நிரூபிக்கப்பட்டால், அவருக்கான இடம் காலியானதாக அறிவிக்கப்படும் என்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் பொறுப்பு இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, ஆள் மாறாட்டம் செய்ததை விசாரணைக் குழுவிடம் உதித் சூர்யாவும், அவரது தந்தையும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இ-மெயில் மூலம் புகார் அளித்தவர், உதித் சூர்யாவுடன் பயிலும் மாணவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இ-மெயில் மூலம் 11-ம் தேதி புகார் வந்த நிலையில், 13-ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், மனஅழுத்தம் காரணமாக கல்லூரியிலிருந்து விலகுவதாக 9-ம் தேதியிட்ட கடிதத்தை உதித் சூர்யா வழங்கியுள்ளார்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின்பேரில், உதித் சூர்யா உள்ளிட்ட 2 பேர் மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ், கண்டனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதித் சூர்யா தலைமறைவாக உள்ளதால், அவரைப் பிடிக்க தனிப்படையை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

First published: September 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading