• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • கட்டணம் இப்படி வசூலித்தால் ஏழை மாணவர்கள் எப்படி நீட் பயிற்சி பெறுவார்கள் : நீதிமன்றம் அதிருப்தி

கட்டணம் இப்படி வசூலித்தால் ஏழை மாணவர்கள் எப்படி நீட் பயிற்சி பெறுவார்கள் : நீதிமன்றம் அதிருப்தி

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • Last Updated :
  • Share this:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை திரும்ப பெற்ற மத்திய அரசு நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் நடப்பாண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 3081 மாணவர்களில் 48 பேர் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

நீட் பயிற்சி மையங்கள் 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனியார் மையங்கள் 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்கள் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மருத்துவப் படிப்பு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்..

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் திரும்ப பெற்று வரும் மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பில் சேரும் முறையை மாற்ற நீட் தேர்வை கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், நீட் தேர்வு பயிற்சிக்காக அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் சாடினர்.

மேலும், 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்குவதாகவும் இது அரசு பள்ளி ஆசிரியர்களை விட மிக குறைவானது என்றும் தெரிவித்த நீதிபதிகள் புனிதமான பணியை செய்து வரும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாகவும் நீதிபதிகள் சாடினர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர்களின் கைரேகைகள் சிபிசிஐடியிடம் இன்று ஒப்படைக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது..

இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை வழங்கும் கைரேகைகளை சிபிசிஐடி காவல்துறையினர் தங்களிடம் உள்ள கைரேகைகளுடன் ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என்றும், நீட் ஆள் மாறாட்டம் குறித்து ஏதேனும் புகார் பெறப்பட்டுள்ளதா என சிபிசிஐடி பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள்

வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: