ராணுவ செவிலியர் மருத்துவக் கல்லூரியின் 2022 பிஎஸ்சி செவிலியர் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏதுவாக, 2022 நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் 20ம் தேதி நள்ளிரவு 11:50 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.
இருப்பினும், திட்டமிட்டப்படி, ஜூலை 17 -ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை விண்ணப்பிக்காத அனைத்து விண்ணப்பதாரர்களும் ,உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்னதாக, CON, AFMC Pune, CON, CH (EC) Kolkata
CON, INHS Asvini என நாட்டின் முக்கிய ராணுவ செவிலியர் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்திய ராணுவ மருத்துவ சேவை தலைமை இயக்குனரகம் வெளியிட்டது.இதில் , தகுதி பெற தேசிய தேர்வு முகமை நடத்தும் 2022 நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். இதற்கான விண்ணப்ப செயல்முறை மே மாதம் 11ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனவே, இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராணுவ கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்
முன்னதாக, வெளியிடப்பட்ட அறிவிப்பில் 2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த காலக்கெடு மே-15 வரை நீட்டிக்கப்பட்டது. விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என்ற நிலையில், இந்த காலக்கெடுவை மே 20ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை:
முன்னதாக, 2022 இளநிலை மருத்துவ/பல் மருத்துவ (பட்டப்படிப்பு) இடங்களுக்கான நீட் நுழைவுத்
தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
மேலும், 12ம் வகுப்பு சிபிஎஸ்சி வாரியத் தேர்வு ஜுலை 15ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜே.இ.இ பிரதான தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET 2022) அடுத்தடுத்தது நடைபெற இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தாண்டு போட்டி மிகக் கடுமையானதாக இருக்கும். எனவே, மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் 2022 ஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.
நீட் தேர்வு குறித்த அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும்,nta.ac.in மற்றும் neet.nta.nic.inஆகிய இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011- 40759000 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.