ஹோம் /நியூஸ் /கல்வி /

"நம்ம ஸ்கூல்" திட்டம் அதிமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்டதா? அன்பில் மகேஷ் விளக்கம்!

"நம்ம ஸ்கூல்" திட்டம் அதிமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்டதா? அன்பில் மகேஷ் விளக்கம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

மூன்று கோடி ரூபாயை வீணடித்து துவக்க விழா நிகழ்ச்சியை நடத்தியதாக பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்ம ஊர் திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் நன்கொடை வந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அர்த்தமற்ற அறிக்கையை விடுத்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

மேலும், "அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் " நம்ம ஸ்கூல், நம்ம ஊர்ப் பள்ளித் திட்டம் தொடர்பாக எடிப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள மூன்று கேள்விகளுக்கும் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

முதலாவதாக, முந்தைய ஆட்சி காலத்தின் போதே,  சிஎஸ்ஆர்  நிதி மூலம் அரசுப்‌ பள்ளிகளின்‌ உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்‌ வகையில்‌,  இணையவழி நிதி திரட்டும்‌ இணைய தளத்தை (https://contribute.tnschools.gov.in) தொடங்கப்ப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "முந்தைய அரசு இணைய தளம் உருவாக்குவதாக அறிவித்தாலும் - அது வெளிப்படையானதாக இல்லை. பல்வேறு குறைபாடுகளில் சிக்கித் திணறியது. பள்ளிக் கல்வித் துறைக்கு/பள்ளிகளுக்கு வர வேண்டிய நன்கொடைகளை மாநில அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழகமே பெற்றுக் கொண்டது. இக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தனியான சேமிப்புக் கணக்கில் 2019-ஆம் ஆண்டு முதல் சி.எஸ்.ஆர். நிதிகள் பெறப்பட்டுள்ளன.

எனினும் அந்த நிதியுதவியைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கான ஒரு நம்பத்தகுந்த கட்டமைப்போ வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வழிமுறையோ அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்படுத்தப்படவில்லை; அனைவராலும் அறியப்பட்ட வழிமுறையோ ஏற்படுத்தப்படவில்லை. கையாளும் வழிமுறை, நிதி சென்று சேரும் முறை, பொறுப்பாக நிதியைக் கையாளும் தன்மை போன்றவற்றில் அத்திட்டம் மிகப் பலவீனமாகவும் மேலோட்டமாகவும் இருந்தது. இவ்வளவு குறைபாடுகளுடன் கூடிய ஒன்றைத் தொடர இயலாது என்னும் நிலையில், அதற்கான மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு இருந்தது. தி.மு.க. அரசில் துவங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம் சி.எஸ்.ஆர். மூலமாகப் பெறப்படும் நிதி மட்டுமல்லாது, முன்னாள் மாணவர்கள் - புரவலர்கள் - தனிநபர்கள் போன்றவர்களிடம் இருந்து பெறப்படும் நிதியை நிர்வகிக்க இலகுவான வழிமுறைகளுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு - தமிழக அரசின் கோரிக்கை ஏற்ற தேசிய தேர்வு முகமை!

பள்ளிக் கல்வித் துறையிலும் நிதித் துறையிலும் உள்ள மூத்த அதிகாரிகளை இயக்குநர்களாகக் கொண்ட ஒரு குழுவால் இத்திட்டம் நிர்வகிக்கப்பட உள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் இத்திட்டத்தின் கௌரவத் தலைவராக இருப்பார். ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன தேவை என்பதை அந்தந்தப் பள்ளியைச் சார்ந்த பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கண்டறிந்து அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அனுப்பி வைக்கவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக, முந்தைய ஆட்சியில் நிதி பெறும் முயற்சிகள் மூலமாக, அதிமுக அரசு 84 கோடி ரூபாய் பெற்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான தகவல் என்றும், 18.09.2019 முதல் 22.04.2021 வரையிலான காலத்தில் பெறப்பட்ட நிதி, வட்டியுடன் சேர்த்து, ரூ.9.7 லட்சம் மட்டுமே கணக்கில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான முக்கிய அறிவிப்பு..!

மூன்றாவதாக, மூன்று கோடி ரூபாயை வீணடித்து துவக்க விழா நிகழ்ச்சியை நடத்தியதாக பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த அன்பில் மகேஷ், " இத்தொகை வரும் ஓராண்டு முழுவதற்கும் மாவட்ட ஆட்சியர்கள் நிறுவனங்களுடன் நடத்தவிருக்கும் கூட்டங்களுக்காகவும், ஊடகங்களில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்காகவும், விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, Edappadi Palanisami