10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக் கல்வித்துறை வளாகம்

அலகு தேர்வுகளை நடத்துவதன் மூலம், மாதம் தோறும் மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பீடு செய்ய இந்தத் திட்டம் மிகவும் பயனுடையதாக இருக்கும்.

 • Share this:
  10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  ஆண்டுதோறும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும், கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் வகுப்புகள் மூலமும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலமாக மாதம்தோறும் அலகு தேர்வுகள் நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், மாணவர்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுக்கள் அமைப்பது, மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன்படி, மாணவர்களுக்கு தனியாகவும், மாணவியருக்கு தனியாகவும் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்பி மாணவர்கள், வினாத்தாளைப் பார்த்து அதற்கு உரிய விடைகளை தனித்தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை பி.டி.எப்., பைலாக மாற்றி அனுப்ப வேண்டும்.

  மாணவர்களின் அந்த விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் இடம்பெற வேண்டும் என்றும், ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அலகு தேர்வுகளை நடத்துவதன் மூலம், மாதம் தோறும் மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பீடு செய்ய இந்தத் திட்டம் மிகவும் பயனுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, கல்வி தொலைகாட்சி வாயிலாக ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதங்களுக்கான நடத்தி முடிக்கப்பட்ட பாட பகுதிகளுக்கு அலகுத் தேர்வை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை 50 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அன்பில் மகேஷ் பொய்யாமொழி


  இந்நிலையில், ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி சோமரசம் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்த முடியவில்லை. கொரோனா நோய்த்தொற்று காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற சூழலில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாக பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  Must Read : தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பாராட்டிய மத்திய பிரதேச அமைச்சர்

  இநிலையில், முதலமைச்சரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறினார். மேலும், பள்ளிகளில் இடைநிற்றல் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி வருகின்றோம். திமுக அளித்த ஏழு முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதுதான் அந்த வாக்குறுதி. எனவே, தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாணவர்கள் இடைநிற்றலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
  Published by:Suresh V
  First published: