மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்..
மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்..
Image: ashok india / Shutterstock.com
Minister Ponmudi: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மருத்துவ கலந்தாய்வுக்கு பின்னர் பொறியியல் கலந்தாய்வு நடத்த உயர்கல்வித்துறை ஆலோசனை மேற்கொள்கிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைந்த சான்றிதழ்களை பெறுவதற்கு உயர்த்தப்பட்ட கட்டணங்கள் பழைய கட்டணத்திலேயே தொடரப்படும்.
பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பின்னர் மருத்துவக்கல்வியில் சேர்வதற்காக மாணவர்கள் விலகுவதை குறைப்பதற்காக நீட் தேர்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு குறித்து வரும் 17ம் தேதி கல்வியாளர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆன்லைனில் எவ்வாறு கலந்தாய்வு நடத்தினால் சரியாக இருக்கும், மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் வீட்டில் இருந்து ஆண்ட்ராய்டு போன் வாயிலாகவோ அல்லது மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளின் வாயிலாகவோ அல்லது தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் ஸ்பெசிபிக்கேஷன் மையங்களை ஏற்படுத்தியோ மேற்கொள்வதற்காக ஆலோசித்து கொண்டு இருக்கிறோம்.
அரசு கல்லூரிகளில் எல்லா இடங்களையும் நிரப்ப வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எந்த கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளதோ அங்கே படிக்க விரும்பும் மாணவர்கள் சென்று சேர்ந்து கொள்ளலாம். அதற்கான கால அவகாசம் வழங்கப்படும்.
முதலமைச்சர் அறிவித்த உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும்", என்றார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.