ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து
சென்னை பல்கலைக்கழகம் வரும் கல்வியாண்டு முதல் ஒன்றிணைந்த பிஎஸ்சி படிப்பினை அறிமுகப்படுத்த உள்ளது.
BBSC எனப்படும் இந்த பட்டப்படிப்பு அறிவியல் பாடப் பிரிவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி இயற்பியல் வேதியியல் கணிதம் மற்றும் உயிர் அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்பும் மாணவர்கள் ஒன்றிணைந்த புதிய பிஎஸ்சி பட்டப் படிப்பினை தேர்வு செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
முதல் நான்கு செமஸ்டர்கள் மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ,உயிரியல் ஆகிய பாடங்கள் செய்முறை வகுப்புகளுடன் கற்றுத்தரப்படும். இறுதியாண்டில் உள்ள மீதமிருக்கும் இரண்டு செமஸ்டர்களில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு முதன்மை பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். மெல்போர்ன் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பிற்கு இணையானதாக சென்னை பல்கலைக்கழகத்தால் கற்பிக்கப்படும் இந்த புதிய பாடப்பிரிவு கருதப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய பட்டப்படிப்பினை மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைந்து கண்காணிப்பார்கள் என்றும் சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: CBSE Exam முதல் NEET Exam வரை - ஏப்ரல் மாதத்தில் முக்கியமான கல்வி நிகழ்வுகள்.!
வரும் 11ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்திற்கு மெல்போர்ன் பல்கலைக்கழகத்திற்கும் இடையே இந்த புதிய பாடப்பிரிவு தொடங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியலில் மெல்போர்ன் பல்கலைக்கழகம் 33 ஆவது இடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.