தகுதியான மாணவிக்கு சீட் கொடுக்காத கல்லூரி: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

தகுதியான மாணவிக்கு சீட் கொடுக்காத கல்லூரி: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம்
  • News18
  • Last Updated: October 18, 2018, 7:12 PM IST
  • Share this:
மருத்துவப் படிப்புக்கான இடம் மறுக்கப்பட்ட மாணவிக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க புதுச்சேரி வெங்கடேஸ்வர மருத்துவ கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தகுதியில்லாத மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்வது குறித்து சென்டாக் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் முடிவெடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.

2018-19-ம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் 156 மதிப்பெண்கள் பெற்ற மிதுனா புதுச்சேரி அரியூரில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெறுவதற்காக விண்ணப்பித்தார். ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற்ற கவுன்சிலிங்காக 16 லட்சம் ரூபாய் கட்டணத்தை வரைவோலையாக சென்டாக் அமைப்புக்கு செலுத்திய நிலையில், தரவரிசை பட்டியலில் 95-வது இடத்தை பிடித்துள்ளார்.

கட்டணத்தை முழுமையாக செலுத்தாதவர்களுக்கும், வேறு கல்லூரிகளில் சேர்ந்தவர்களுக்கும் கலந்தாய்வு மூலம் மூன்று பேருக்கு இடம் ஒதுக்கியுள்ள நிலையில், மருத்துவர் கனவுடன் உள்ள தனக்கு இடமளிக்கப்படாததை எதிர்த்து மாணவி மிதுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை ஆகஸ்ட் 30-ம் தேதி விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், மாணவி மிதுனாவின் வழக்கை கருத்தில் கொண்டு ஒரு இடத்தை நிரப்பாமல் வைக்க இடைக்கால உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை உடனடியாக கல்லூரிக்கு தெரிவித்தும் கண்டுகொள்ளாத நிலையில், சென்டாக் அமைப்பு மாணவிக்கான இடத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்து கல்லூரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

மாணவி மற்றும் செண்டாக் ஆகியவற்றின் கருத்தை நிராகரித்த கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.அப்போது நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், தகுதியான மாணவிக்கு இடமளிக்காமலும் தகுதியில்லாத மற்றும் சென்டாக் பட்டியலில் இல்லாத மாணவர்களுக்கு இடமளித்திருப்பதும் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

அனைத்தையும் பதிவு செய்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் மாணவிக்கு இடமளிக்காததால் 2019-20-ம் ஆண்டு மருத்துவ சேர்க்கையில் மாணவி மிதுனாவுக்கு இடமளிக்க வேண்டும் எனவும், மாணவிக்கு எற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஒரு இடத்தை குறைத்தே மாணவர் சேர்க்கை நடத்த சென்டாக் அமைப்புக்கும், நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்திய கல்லூரியின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 5 இடங்களை கல்லூரி நிரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லூரியில் தகுதியில்லாத மாணவர்களை சேர்த்தது குறித்து சென்டாக் அமைப்போ அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலோ விசாரணை மேற்கொண்டு அந்த மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
First published: October 18, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்