பட்டியல் சாதி (எஸ்.சி) மாணவர்களின் சேர்க்கை 18%க்கு குறைவான பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருத்துதாஸ் காந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், ‘தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை விகிதம் (GSR ), பொதுக் கல்வி விகிதத்திற்கு இணையாக வளர்ந்துள்ளது என்பது மாநிலத்துக்குப் பெருமை.
தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகள் உட்பட்ட 13,000 பள்ளிகளில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 20%-க்கு மேலுள்ளது. சில ஆயிரம் பள்ளிகளில் 50 %-க்கு மேலுள்ளனர். ஆயினும் வேறு 10,000 பள்ளிகளில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18%-க்குக் கீழாகவே உள்ளது.
1,000 பள்ளிகளில் இது 5%-க்குக் குறைவாகவும், 100 பள்ளிகளில் 0% ஆகவும் உள்ளது. இதுபற்றிய புள்ளிவிவரங்களை 2005 முதல் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வந்தும் இது பற்றிய ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் இல்லை.
தற்போதாவது எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்துக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆய்வை மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்து, மாணவர்களின் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்
இந்த, கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் இதுகுறித்த நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
படிப்பதிலும் அரசுவேலை பெறுவதிலும் பெண்களே முன்னிலை தரவுகள் சொல்லும் உண்மை
இதுகுறித்த அரசுக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, ’சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருத்துதாஸ் காந்தி என்பவரிடமிருந்து பெறப்பட்ட மனுவின் நகல் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.
இம்மனுவில், அரசுப் பள்ளி உட்பட சில ஆயிரம் பள்ளிகளில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18%க்குக் கீழாகவும், 1000 பள்ளிகளில் 5%-க்குக் குறைவாகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தற்போது எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18% க்குக் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்து அவர்களின் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.