ஹோம் /நியூஸ் /கல்வி /

எல்கேஜி விவகாரம்.. கடைசி நேரத்தில் தலையிட்டு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்

எல்கேஜி விவகாரம்.. கடைசி நேரத்தில் தலையிட்டு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்

மழலையர்

மழலையர்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கல்வித்துறையில் ஆசிரியர்கள் அதிகமாகவே இருக்கின்றனர் என்ற ஒரு கருத்தை அமைச்சர் கூறிவந்தார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

திமுக அரசு பதவியேற்றதற்குப் பிறகு மற்ற துறைகளை விட, பள்ளிக்கல்வித்துறை அதிகமான சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. எல்கேஜி யூகேஜி விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமில்லாமல், கூட்டணி கட்சித் தலைவர்களின் கண்டனங்களையும் சந்தித்ததன் காரணமாகவே, முதலில் எடுத்த முடிவை தமிழக அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதவி ஏற்ற பிறகு, பல்வேறு நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது, அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டன. குறிப்பாக, தேர்வுத்துறை சீர்திருத்தங்கள்,  புதிய பாடப் புத்தகங்கள் அச்சடிப்பு, தேர்வு முடிவுகளை மொபைல் போன் வழியாக வெளியிடுவது என பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். ஆனாலும் கடைசி காலகட்டத்தில் கடும் சர்ச்சைகளை சந்தித்தார் செங்கோட்டையன். ஒவ்வொரு கருத்திலும் அவ்வப்போது மாற்றி மாற்றி பேசியதாக சர்ச்சை எழுந்தது .

திமுக அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறையில் நிலவிவந்த குளறுபடிகள் சரியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தை விட அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அமைச்சரவைக்கு புதிய முகமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், இந்த துறை ஒப்படைக்கப்பட்டது. ஒன்றரை கோடி மாணவர்கள், 10 லட்சம் ஆசிரியர்களைக் கொண்ட மிகப்பெரிய பொதுத்துறையை திறமையாக சமாளிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழக அரசு எதிர்க்ககூடிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பள்ளிக்கல்வித்துறையில் அமல்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

புதிய கல்வி கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று வெளியான சுற்றறிக்கை, எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும் இல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சுற்றறிக்கையை வெளியிட்ட இணை இயக்குனர் அமுதவல்லி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். மேலும் அந்த பயிற்சி திட்டத்தை திரும்பப் பெறுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அமைச்சருக்கே தெரியாமல் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு துறையில் எப்படி பணிகள் நடைபெறுகின்றன என்ற கேள்வியை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

இதையும் படிக்க: அதிகரித்துவரும் கொரோனா.. மீண்டும் கட்டுப்பாடு? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்,  அதில் எந்த ஒரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வில்லை என்பது தற்போது வரை சலசலப்பாக இருந்து வருகிறது . தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், இந்து அறநிலையத்துறையில் தற்காலிக பணியாளர்கள் எல்லாம் பணி நிரந்தரம் செய்யப்படும் போது , இந்தத் துறையில் மட்டும் நடைபெறாதது ஏன் என்ற கேள்விகளை பகுதிநேர ஆசிரியர்கள் எழுப்புகின்றன ர்.

நெல்லையில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3  மாணவர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அதன் பிறகே பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கல்வித்துறையில் ஆசிரியர்கள் அதிகமாகவே இருக்கின்றனர் என்ற ஒரு கருத்தை அமைச்சர் கூறிவந்தார்.

மேலும் படிக்க: பாஜக தலைவர் அண்ணாமலை என்ன திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையா?- திருநாவுக்கரசர் காட்டம்

ஆனால், உண்மை நிலையை எடுத்துக்காட்டும் வகையில், தொடக்கக் கல்வித் துறையின் அறிக்கை அமைந்திருந்தது. துறையில் 9 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்றும், இதன் காரணமாகவே கற்றல் அடைவுத் திறனில்  தமிழகம் 27 வது இடத்திற்குத் தள்ளப்பட்ட தாகவும் தொடக்க கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற போதும் இத்திட்டத்தை மூடுவது ஏன் என்று பலரும் கேள்விகளை எழுப்பினர்.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என எதிர்கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல், கூட்டணி கட்சித் தலைவர்களான கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கடுமையான அதிருப்தியை வெளியிட்டனர்.

மேலும் படிக்க: ஆதீனங்களுக்குள் அரசியல் பேசுவது சரியில்லை - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

இதற்கிடையே இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எல்கேஜி யூகேஜி வகுப்புகள் மூடப்படவில்லை என்றும் , சமூக நலத்துறையில் அவை தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூக நலத்துறையில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே அங்கன்வாடிகளில் பணியாற்றி வரும் நிலையில் , அவர்கள் எப்படி எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த முடியும் என்றும்,  அமைச்சரின் பதில் மழுப்பலாக இருக்கிறது என்றும், அன்புமணி ராமதாஸ் காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.

இப்படி தொடர்ச்சியாக பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்தே,  முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு, முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக, முதல்வர்,  அமைச்சரிடம் கடுமையாக பேசியதாக தெரிகிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை பெற்றோர்கள் விரும்பும் போது,  அதை அனைத்து தரப்பினரும் ஆதரிக்கும் போது, அதற்கு எதிரான ஒரு முடிவை எப்படி எடுக்கலாம் என, முதல்வர்,  அமைச்சரிடம் கேட்டதாகவும், நிதிப் பிரச்சனை இருந்தாலும் எல்கேஜி யூகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்.

இதற்குப் பிறகே அவசர அவசரமாக  , எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும்,  இதற்காக சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. புதிய கல்விக் கொள்கையை தொடர்ந்து,  எல்கேஜி யூகேஜி விவகாரத்திலும் பள்ளிக்கல்வித்துறை கடும் விமர்சனங்களை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CM MK Stalin, LKG, School, UKG