தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காது கேளாத வாய்பேசாத மாற்றுத்திறன் கொண்ட மாணவ/மாணவியர் காஞ்சிபுரத்தில் செயல்படும் உண்டு/உறைவிட பள்ளியில் சேர்ந்து பயனடையலாம் என்று அம்மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. ஆர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வுத் துறையால் நடத்தப்படும் அரசு உயர்நிலைப்பள்ளியானது கோட்டை காவல் கிராமம் (மாவட்ட அரசு இசைப் பள்ளி அருகில்) சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் காது கேளாத வாய்பேசாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் முன்பருவப்பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை சேர்ந்து பயிலும் வண்ணம் அமைந்துள்ளது.
பள்ளியில் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் ஆண்/ பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கலாம். இப்பள்ளியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவ/மாணவியர் வந்து தங்கிப் பயிலும் வண்ணம் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் காது கேளாத வாய் பேசாத மாணவர்களுக்கென கற்பிக்க சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடங்களோடு பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
பள்ளியில் பயிலும் மாணவர்களின் தனித்தனி திறன்களை மேம்படுத்த கணினி வழிக் கற்பித்தல், யோகா,கராத்தே தியானம், உள் அரங்க விளையாட்டுகளும் பயிற்சியாளர்களைக் கொண்டு கற்பிக்கப்படுகிறது. பரந்த விளையாட்டுத் திடலும் விளையாட்டு சாதனங்களும் கொண்டு மாணவர்களின் உடல் நலம் பேணப்படுகிறது.
இதையும் வாசிக்க: டெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு
விடுதியில் மூன்று வேளையும் சத்தான சமச்சீர் உணவும், சோப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படுகின்றன. தமிழக அரசால் வழங்கப்படும் ஆண்டு கல்வி உதவித் தொகை (1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 1000 முதல் 3000 வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 4000 வரையிலும் வழங்கப்படுகிறது) இலவச காதொலிக் கருவி, விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை புத்தகப் பை, காலணிகள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து பயணச் சலுகை என அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
இதையும் வாசிக்க: பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்கள் எது? புள்ளிவிவரங்கள் வெளியானது
எனவே, காது கேளாத வாய்பேசாத மாற்றுத்திறன் கொண்ட மாணவ/மாணவியர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்பள்ளியில் சேர்க்கை பெற பொ.வள்ளி தலைமை ஆசிரியை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி சதாவரம் ஓரிக்கை அஞ்சல் காஞ்சிபுரம் 631502 எனும் முகவரியில் சென்று அணுகவும். மேலும் விவரம் வேண்டுவோர் பள்ளி அலுவலகத்தை 044- 27267322, 9597465717 என்கிற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு சேரலாம்.
இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.