பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கல்வி நிறவனங்களான ஐஐடி, என்ஐடி உள்ளிட்டவற்றில் சேர்வதற்கான இத்தேர்வினை 8.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதன் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
இதில் நாடு முழுவதிலும் இருந்து 24 மாணவர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 8 மாணவர்கள் 100% மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் முதன்மை மதிப்பெண் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட இடம் பெறவில்லை.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜேஇஇ தேர்வு மூலம் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு 12-ஆம் வகுப்பில் 75 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும் என்கிற விதிகளில் தளர்வு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐஐடி-யில் சேர்வதற்கான ஜேஇஇ பிரதான தேர்வு வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வு சதவிகித அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 2.45 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.