தற்போது, பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வின் (CUET- UG) மூலமே இளங்கலை மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு CUET- UG எனும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று, நாட்டில் உள்ள 31 தேசிய தொழில்நுட்பக் கழகம் ,26 தொழில்நுட்ப நிறுவனங்களின் (IIITs), மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை ஜேஇஇ முதன்மை தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.
தற்போது,இந்த மூன்று நுழைவுத் தேர்வுகளும் தேசியளவில் பிரபலமானது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த மூன்று தேர்வுகளுக்கு மட்டும், ஆண்டுக்கு சராசரியாக 40 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த பொது தகுதித் தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டம் தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பல்கலைக்கழக மானியத் தலைவர் ஜகதீஷ் குமார் அளித்த பேட்டியில், "கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்களை நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளில் எழுத வேண்டியுள்ளது. பல எண்ணிக்கையிலான தேர்வுகளை தவிர்க்கும் பொருட்டு, ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வு நடத்த முடியுமா? என்ற சிந்தித்து வருகிறோம். இதுதொடர்பாக ஆராய குழு அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், " ஒருங்கிணைந்த தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம், விண்ணப்பதாரர்கள் ஒரு முறை தேர்வெழுதினால் போதும். அதில், பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பலதரப்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். உதாரணமாக, நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஜேஇஇ தேர்வுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் முக்கியத்துவம் பெறுகின்ற்னன. CUET- UG பொது நுழைவுத் தேர்வில் இந்த பாடங்களையும் சேர்த்து 63 பாடங்கள் இடம்பெறுள்ளன.
எனவே, CUET- UG தகுதித் தேர்வின் மூலம், விண்ணப்பதாரர்கள் ஒரு முறை தேர்வு எழுதிய பிறகு, இளநிலை மருத்துவம், பொறியியல் , பொதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இது, விண்ணப்பித்தார்களின் சுமையைக் குறைக்கும். தவிர்க்கப்படக் கூடிய பயணங்கள் குறைக்கப்படும். தேர்வு மையங்களை அடைவதற்கான வசதி அதிகரிக்கும், தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
உயர்கல்வி பங்குதாரர்கள் அனைவரின் கருத்துக்கள் பெறப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.