தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களுக்கு மேல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கல்வியாளர்களும் மனோதத்துவ நிபுணர்களும் தெரிவித்து வந்தனர். மேலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகின.
இந்தநிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
எனவே , தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். பள்ளித் தூய்மை, புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் ,தூய்மையாகவும் இருக்கும் வகையில் பள்ளி வளாகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .
பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் , தலைமை ஆசிரியர் அறை , சமையலறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும் . வகுப்பறை மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள தளவாட பொருட்கள் , கதவு மற்றும் ஜன்னல்கள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் .
பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாமலும் , மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதை , மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும் .என தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது அந்த வகையில் வருகின்ற 27ஆம் தேதிக்குள் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.