தேசிய அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு இந்தியா குறித்த சமூக ஆய்வுகள் போன்ற பாடப்பிரிவுகள் 2022 – 2023-லிருந்து கல்வி உதவித்தொகை பெறுவதற்கு உரியவையாக கருதப்பட மாட்டாது என்று சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பட்டியல் சாதிகள், சீர்மரபினர், நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியினர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரிய கைவினைஞர் பிரிவுகளுக்கு தேசிய அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1954ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, அயல்நாட்டு பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறை ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டும் நிதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2012ம் ஆண்டு மனிதநேயம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் இதன்கீழ் சேர்க்கப்பட்டன. பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ள நிலையில், 2012 திருத்தப்பட்ட வழிமுறைகள் எண்ணற்ற மாணவிகளுக்கு பலனளித்தது.
உலகின் தலை சிறந்த கல்வி நிறுவங்களில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் முதுநிலை அல்லது பிஎச்.டி பட்டம் பெறத் தொடங்கினர். ஆண்டாண்டு காலமாக அதிகார மையத்தில் இருந்து விலக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான வரலாற்றினை மீள் ஆய்வு செய்வதற்கும், வரலாற்றெழுதியல் முறையினில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் இத்திட்டம் பயனளித்து வந்ததாக கல்வியாளர்கள் தெரிவித்து வந்தனர்.

தேசிய அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டப் பயனாளிகள்
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் மத்திய சமூகநீதித் துறை சில அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்தது. புதிய நெறிமுனைகளின் கீழ் இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு, இந்தியாவைப் பற்றிய சமூக ஆய்வுகள் போன்ற பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும் மாணவர்கள் உரிமை கோர முடியாது என்று தெரிவித்தது.
இதையும் வாசிக்க: ஆன்லைன் விண்ணப்பத்தில் புதிய திட்டம்... டிஎன்பிஎஸ்சி சொன்ன ஹேப்பி நியூஸ்
இதற்கு, பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு நிலவியது. பாடநெறிகள் மீதான கட்டுப்பாடு உடனடியாக திரும்பப் பெறப்படவேண்டும் என 20 க்கும் மேற்பட்ட சர்வதேச கல்வி சங்கங்கள், ஆராய்ச்சி மையங்கள், உலகம் முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்ட சர்வதேச அறிஞர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தன.
இந்நிலையில், நேற்று மாநிலங்களளையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் ஏ. நாரயணசாமி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
அதில், வெளிநாடுகளில் கல்வி கற்கும் பட்டியலின மற்றும் இதர மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அவ்வப்போது ஆய்வு செய்து வரும் இந்தத் துறை நடைமுறைகளை எளிதாகவும், அவற்றை மேலும் வெளிப்படைத்தன்மை உள்ளதாகவும் மாற்றி வருகிறது.
இதையும் வாசிக்க: TNPSC : குரூப் 1 முதல் நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் பயில்வதற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், நிதி ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக அதிகபட்ச தேவையுள்ள பாடப்பிரிவுகளுக்கு கல்வி உதவித் தொகையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் வலுவாக உள்ள அல்லது இந்தியாவில் களப்பணி செய்ய முடிகின்ற துறைகள் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு இந்தியா குறித்த சமூக ஆய்வுகள் போன்ற பாடப்பிரிவுகள் 2022 – 2023-லிருந்து கல்வி உதவித்தொகை பெறுவதற்கு உரியவையாக கருதப்பட மாட்டாது. அதே சமயம் சர்வதேச வெளிப்பாட்டுக்கு தேவைப்படுகின்ற சட்டம், பொருளாதாரம், உளவியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு நிதியுதவி செய்யப்படும். இந்த மாற்றம் காரணமாக ஏழ்மையான பட்டியலின வகுப்பு மாணவர்கள் உலகளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.
எனவே வெளிநாடுகளில் கல்வி கற்போருக்கான புதிய தேசிய கல்வி உதவிக் கொள்கை இருக்காது. தற்போதுள்ள ஷெல்யூல்டு வகுப்பு மற்றும் இதர மாணவர்களுக்கான வெளிநாட்டில் பயில தேசிய கல்வி உதவித்தொகை திட்டம் அண்மையில் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்தத் துறையின் மூலம் தொடர்ந்து அமலாக்கப்படும்.
இவ்வாறு, அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.