June 2021 Important Days: சைக்கிள் தினம் முதல் குழந்தை கடத்தல் தடுப்பு தினம் வரை - ஜூன் மாத முக்கிய நாட்கள்!

மாதிரிப் புகைப்படம்

உடல் மற்றும் மனதில் யோகா ஏற்படுத்தும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி உலக யோகா நாள் கடைபிடிக்கப்படுகிறது.

  • Share this:
2021 ஜூன் மாதத்தைப் பொறுத்தவரை உலகளவில் ஏற்படுத்தப்பட வேண்டிய விழிப்புணர்வு, நோக்கம், செயல்முறைகள் குறித்து கடைபிடிக்கப்படும் நாட்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை தேதி வாரியாக இங்கு தெரிந்து கொள்வோம்.

ஜூன் 1; உலக பால் நாள் ( June 1 - World Milk Day )

பால் உற்பத்தி மற்றும் அதன் சார்ந்து தயாரிக்கப்பபடும் பொருட்கள், அதன் வழியே கிடைக்கப்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பால்வளத்துறை மூலம் நீண்டகால நீடித்த வளர்ச்சியை அடைவதன் சாத்தியம் குறித்து ஜூன் 1 ஆம் தேதி பரவலாக எடுத்துரைக்கப்படுகிறது.

ஜூன் 1: உலக பெற்றோர் நாள் (June 1- Global Parents Day)

உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது செலுத்தும் சுயநலமில்லா அன்பை பறைசாற்றும் விதமாக உலக பெற்றோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஜூன் 2: உலக பாலியல் தொழிலாளிகள் நாள் (June 2 - International Sex Workers Day )

1975 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி பிரான்சில் செக்ஸ் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை காவல்துறையினர் அடக்கி ஒடுக்கினர். அன்றிலிருந்து செக்ஸ் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்கும் நாளாக ஜூன் 2 உள்ளது.

ஜூன் 2: தெலங்கானா பிறப்பு (June 2- Telangana Formation Day)

2014 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து பிரித்து, 29வது மாநிலமாக தனியாக உருவாக்கப்பட்டது. அந்த நாள் தெலங்கானா மாநிலம் உருவான நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

ஜூன் 3; உலக சைக்கிள் நாள் (June 3 - World Bicycle Day)

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஜூன் 3 ஆம் தேதியை உலக சைக்கிள் நாளாக அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்ததாமல், போக்குவரத்துக்கு உதவும் சைக்கிள் வாகனத்துக்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆரோக்கியத்துக்கும் சைக்கிள் பயணம் உதவுகிறது.

ஜூன் 4: ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான நாள் (June 4 - International Day of Innocent and Children Victims of Aggression)

இந்த நாளில் ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையால் உடல் மற்றும் மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய மோசமான பாதிப்புகளை உலகில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது இந்த நாளின் நோக்கமாகும்.

ஜூன் 5:  உலக சுற்றுச்சூழல் நாள்(June 5 - World Environment Day)

உலகளவில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக உலக சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சுற்றுசூழல் பாதிப்பு, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஜூன் 7: உலக உணவு பாதுகாப்பு நாள் (June 7 - World Food Safety Day)

2019 ஆம் ஆண்டு உலக உணவுப் பாதுகாப்பு நாள் முதன்முறையாக தோற்றுவிக்கப்பட்டது. 2வது உலக உணவுப் பாதுகாப்பு நாள் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் என்றால், உணவினால் ஏற்படும் ஆபத்துகள், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி, இயற்கை விவசாயம், நோய்கள், மனித உடல் பாதிப்பு மற்றும் சுற்றுலா குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஜூன் 8: உலக மூளைக்கட்டி நாள் (June 8 - World Brain Tumour Day)

ஜெர்மன் மூளைகட்டி சங்கத்தால் உருவாக்கப்பட்ட உலக மூளைக் கட்டி நாள் 2000 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. மூளையில் உருவாகும் கட்டிகள் குறித்தும், அதனால் உடலில் தோன்றும் பக்கவிளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஜூன் 8: உலக கடல் நாள் (June 8 - World Oceans Day)

கடல் குறித்து போதுமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உலக கடல் நாள் அனுசரிக்கப்படுகிறது. கடல் நீர் மாசு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஜூன் 12: குழந்தை தொழிலாளர் தடுப்பு நாள் (June 12 - World Day Against Child Labour)

2002 ஆம் ஆண்டு முதல் உலக குழந்தை தொழிலாளர் தடுப்பு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநாளில் குழந்தை தொழிலாளர்களை குறைத்து, அவர்களுக்கான கல்வியை கொடுக்கும் நோக்கில் குழந்தை தொழிலாளர்கள் நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.

ஜூன் 14: உலக ரத்த கொடை நாள் (June 14 - World Blood Donor Day)

2004 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் இந்நாளில் ரத்த தானத்தின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒருவரின் உயிரைக் காக்கும் ரத்தத்தை தானமாக வழங்க வேண்டும் என மக்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது.

ஜூன் 15: உலக காற்றாலை நாள் (June 15 - Global Wind Day )

உலக காற்றாலை நாளில், காற்று மூலம் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரம் மற்றும் அவற்றின் பின்புலத்தில் இருக்கும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஜூன் 15: உலக முதியோர் சித்திரவதை விழிப்புணர்வு நாள் (June 15 - World Elder Abuse Awareness Day)

அமெரிக்க மற்றும் உலக நாடுகளில் உலக முதியோர் சித்தரவதை நாள் கடைபிடிக்கப்படுகிறது.வயதான முதியவர்கள், அவர்களின் கடைசி காலத்தில் எதிர்கொள்ளும் அவமானங்கள், சித்திரவதைகள், நிராகரிக்கப்படும் பண உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஐ.நா மன்றமும் இந்நாளை அங்கீகரித்துள்ளது.

ஜூன் 18: ஆட்டிஸ்டிக் நாள் (June 18 - Autistic Pride Day)

ஆட்டிஸ்டிக் என்பது கனவு உலகத்தில் வாழ்வது ஆகும். தாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கூட அவர்களுக்கு தெரியாது. இது குறித்து இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஜூன் 19: சிக்கிள் செல் அல்லது அரிவாள் செல் ரத்தசோகை (June 19 - World Sickle Cell Awareness Day)

உடலில் சிக்கிள் செல் அல்லது அரிவாள் செல் ரத்தசோகை என்பது ஹீமோஃகுளோபின் மற்றும் குறைவான ஆக்சிஜன் அளவை உருவாக்கும். இந்த நோய் குறித்து மக்கள் அறிந்துகொள்வதற்காக கடைபிடிக்கப்படும் நாளாகும்.

ஜூன் 19: உலக சாண்டிரிங் நாள் (June 19 - World Sauntering Day)

கவலைகளைக் கடந்து நம் வாழ்வில் பார்க்க வேண்டிய பல அற்புதமான விஷயங்கள் உள்ளன என்பதை ஞாபகப்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.

ஜூன் 20: உலக அகதிகள் நாள் (June 20 - World Refugee Day)

உலகளவில் அகதிகளின் உரிமையை நிலைநாட்டுவதற்காகவும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் கடைபிடிக்கப்படும் நாள். டிசம்பர் 4, 2000 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக உலக அகதிகள் நாள் ஐ.நா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஜூன் 21: உலக இசை தினம் (June 21 - World Music day)

1982 ஆம் ஆண்டு முதன் முதலாக உலக இசை நாள், பிரான்ஸ் நாட்டின் கலை வளர்ச்சி துறை அமைச்சர் ஜாக் லாங் பாரிஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஜூன் 21 ஆம் தேதி உலக இசை நாள் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 21: உலக ஹைட்ரோகோபி நாள்; (June 21 - World Hydrography Day)

ஹைட்ரோகோபி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், கடல் பயணத்தின்போது ஹைட்ரோகோபியர்களின் பங்கு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கம்.

ஜூன் 21: உலக யோகா நாள் (June 21 - International Yoga Day)

உடல் மற்றும் மனதில் யோகா ஏற்படுத்தும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு முதல் உலக யோகா நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஜூன் 21: உலக தந்தையர் தினம் (June 21 - World Fathers’ Day)

தந்தை மற்றும் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஜூன் 21 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 23: உலக ஒலிம்பிக் நாள் (June 23 - International Olympic Day)

விளையாட்டுப் போட்டிகளில் அனைத்து தரப்பு குழந்தைகளும் பங்கெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் உலக ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிறது. வயது, சமூக பின்புலம், பாலினம் விளையாடுவதற்கு தடையில்லை என்பதையும், இருபாலினத்தவர்களையும் சமத்துவதமாக விளையாட்டுப் போட்டிகளில் நடத்துவது குறித்து உலக ஒலிம்பிக் நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஜூன் 23: ஐ.நா பொதுச்சேவை நாள் (June 23 - United Nations Public Service Day)

பொதுச்சேவையின் முக்கியத்துவம் மற்றும் இளம் தலைமுறையினரை பொதுச்சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக ஐ.நா பொதுச்சேவை நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு இந்த நாள் தோற்றுவிக்கப்பட்டது.

ஜூன் 23: உலக விதவையர் நாள் (June 23 - International Widow’s Day)

விதவையர்களின் உரிமை, அவர்களுக்கு ஏற்படும் சமூக புறக்கணிப்பு, ஏமாற்றம், வருத்தத்தை போக்குவதற்காக உலக விதவையர்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஜூன் 26: போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான நாள் (June 26 - International Day against Drug Abuse and Illicit Trafficking )

போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மூலம் எய்ட்ஸ், ஹெபாடிட்டைஸ், உள்ளிட்ட மிக கொடிய நோய்கள் ஏற்படுவது குறித்தும், அடிதடி, கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவை ஏற்படுவதும் குறித்தும் இந்நாளில் மக்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது

ஜூன் 30: உலக குறுங்கோள் நாள் (June 30 - World Asteroid Day)

1908, ஜூன் 30 ஆம் தேதி புவி வட்டப்பாதையில் முதன்முறையாக குறுங்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் விதமாகவும், குறுங்கோள்களின் நகர்வுகள் குறித்தும் இந்நாளில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.
Published by:Murugesh M
First published: