உயர்கல்விக்கான மத்திய, மாநில அரசுகளின் நிதி முதலீட்டில் படிப்படியாக தொய்வு காணப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் உயர்கல்வி உறுதித் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய தேசியக் கல்விக் கொள்கை, ஜிஎஸ்டி வரி கட்டமைப்பு, அதிகரித்து வரும் கல்விக் கடன் மற்றும் வீட்டுச் செலவினங்கள்(House hold Expenditure) ஆகியவற்றிற்கு மத்தியில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் உயர்கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரம்பம் மற்றும் மேல்நிலை கல்விகள் மீதான முதலீடுகளுக்கு சமுதாய அளவில் விருத்தி அதிகரிப்பதாகவும்(Social Return on Investment ) உயர்கல்வி முதலீடுகளால் தனிநபரின் விருத்தி அதிகரிப்பதாகவும் சமகால கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. 1990களுக்குப் பிந்தைய இந்திய சந்தைப் பொருளாதாரத்தில் இந்திய உயர்கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றன.
உதாரணமாக, 2019-20-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின் படி (AISHE Survey), நாட்டில் 78.6% கல்லூரிகள் தனியார் நிறுவனங்களாகும். ஆனால், மாணவர் சேர்க்கை 66.3% ஆக உள்ளது. மீதிமுள்ள 21.4% அரசு கல்லூரிகளில் 33.7% மாணவர் சேர்க்கை உள்ளது.
பெண்மைப்படுத்தப்பட்ட உயர்கல்வி (feminisation of Higher education):
நாட்டின் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை கடந்த 2015-16-ம் ஆண்டு 1.60 கோடியாக இருந்த நிலையில், 2019-20-ல் 1.89 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கிட்டத்தட்ட 18.9 சதவிகித வளர்ச்சியாகும். இது, நல்லது என்றாலும் போதுமானதாக இல்லை என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உயர்கல்வியைக் கட்டுப்படுத்தும் சந்தைப் பொருளாதாரம் பாலினம் ரீதியாக நிலவும் பாரபட்சங்களை நீக்காமல், அதனை உள்வாங்கிக் கொண்டுள்ளது. உதாரணமாக, வேளாண்மை, பொறியியல் தொழில்நுட்பம், வடிவமைப்பு தொழில்நுட்பம் போன்ற இளநிலை தொழில்நுட்ப படிப்புகளில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
ஆனால், கலை, அறிவியல், சமூக அறிவியல், சமூக சேவை போன்ற பொதுநிலை படிப்புகளில் (General - Academic Education) மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை 7 லட்சம் கூடுதலாக உள்ளது.
மேலும், இளநிலை தொழில்நுட்ப பிரிவில் பயிலும் மாணவிகளில், 72.3% பேர் தனியார் கல்வி நிறுவனங்களில் தான் படித்து வருகின்றனர். அதேபோன்று, முதுநிலை தொழில்நுட்ப படிப்புகளில் இந்த எண்ணிக்கை 60.7% ஆக உள்ளது.
இதையும் வாசிக்க: இந்திய பொருளாதாரம் உயர்கல்வியை ஏற்றுக் கொள்கிறதா?
கலை, அறிவியல் படிப்புகள் தாழ்ந்தவை என்று பொருள் கொள்ளப்பட தேவையில்லை. மாறாக, மற்றவர்ளுக்கு இறக்கம் காட்டல், குடும்பத்தை நிர்வகித்தல், தாய்மை பண்பு, போட்டி முனைப்பு இல்லாத தன்மை போன்ற பண்புகளை உடையவர்களாக பெண்களை சமூகம் வர்ணித்து வந்தது. இந்த பாலின சமத்துவமின்மையைத் தான் உயர்கல்வி அங்கீகரிப்பு செய்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் உயர்கல்வி தேவைக்கான கல்விக்கடன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2009 - 13 வரையிலான ஆண்டுகளில் கல்விக்கடன் பெறும் மாணவிகளின் எண்ணிக்கை 35 சதவீதமாக உள்ளது. மேலும், டிப்ளோமா, விருந்தோம்பல், பொறியியல் உள்ளிட்ட பாடநெறிகளில் பெண் பயனாளிகளின் எண்ணிக்கை 30%க்கும் குறைவாக உள்ளன. அதேசமயம், மருத்துவம், நர்சிங், கல்வித்துறை ஆகிய பாடநெறிகளில் பெண் பயனாளிகளின் எண்ணிக்கை 60%க்கும் அதிகமாக உள்ளது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பொறியியல் கல்வியில் ஆண்டு செலவினம் ரூ. 1 லட்சம் வரை செலவாகும் நிலையில், நர்சிங், ஆசிரியர் கல்வி உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆண்டு செலவினம் ரூ.50,000க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் உயர்கல்வி வளர்ச்சி கல்விக்கடன் திட்டத்தால் மாணவிகளை விட மாணவர்களே அதிகம் பயனடைந்து வருகின்றனர்.
Education Series 2: எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உள்ளன
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்:
உயர்கல்வியில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் தவிர்க்கமுடியாதது. உயர்கல்விக்காக செலவிடப்படும் 100 ரூபாயில், 65 ரூபாய் கல்விக்கடன் மற்றும் வீட்டுச் செலவீனங்கள் மூலம் செலவிடப்படுவதாகவும், 35 ரூபாய் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செலவிடுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமூகம் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக, மாணவிகள் பெரும்பாலும் தொழில்நுட்ப படிப்புகளை தவிர்க்க வேண்டிய சூழல் நிலவியுள்ளது. அதன் காரணமாக, கல்விக்கடன் திட்டம் மாணவர்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.
Education Series 1: பொறியியல் படிப்புகளின் இன்றைய நிலை என்ன?
மேற்படி, சூழல்களை வைத்து பார்க்கும் பொழுது, அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/ வழங்கும் உயர்கல்வி உறுதித் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.
பெற்றோர்களின் வீட்டுச் செலவினங்களை குறைத்தாலும், இத்திட்டம் உயர்கல்வியில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்க வழிவகை செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே, தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு மானியங்களை அதிகரித்தல், அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களை வேகப்படுத்துவது, தனியார் கல்லூரி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை கண்காணிப்பது, கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவது, விளிம்பு நிலை மாணாக்கர்களின் கல்வி உதவித் தொகையை அதிகரிப்பது போன்றவைகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Higher education