இந்திய மொழித் தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்தும் வகையில், 'ஏஐ4பாரத் நீலேகனி மையத்தை
சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்த மையத்திற்கு பிரபல மென்பொருள் தலைவர் நந்தன் நீலேகனி மற்றும் அவரது இணையர் ரோஹினி ஆகியோர் நீலேகனி தொண்டு நிறுவனம் மூலம் ரூ.36 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய 'ஓபன் சோர்ஸ்' மொழியைக் கட்டமைக்கும் ஐஐடி மெட்ராஸ்-ன் முன்முயற்சியாகவே ஏஐ4பாரத் தொடங்கப்பட்டுள்ளது. இயந்திர மொழிபெயர்ப்பு (Machine Translation), தானியங்கிப் பேச்சு அறிதல் (Speech Recognition) போன்றவற்றுக்கான அதிநவீன மாதிரிகளும் இதில் அடங்கும் என்று சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐஐடி வளாகத்தில் இன்று (28 ஜூலை 2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு. நந்தன் நீலேகனி அவர்கள் இதனைத் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய நந்தன் நீலேகனி, "கூட்டு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி (collaborative Artificial Intelligence), குடிமக்களுக்கான அனைத்து சேவைகளும், தகவல்களும் அவரவர் தாய்மொழியில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 'டிஜிட்டல் இந்தியா பாஷினி மிஷன்' தொடங்கப்பட்டு உள்ளது.
இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவுப் பணியில் விரைந்து செயல்பட்டு பாஷினி மிஷன் இலக்கை எட்டும் வகையில் ஏஐ4பாரத் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கும்" என்றும் குறிப்பிட்டார்.
இதையும் வாசிக்க: கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணிகளில் நியமன விகிதம் 0.3% மட்டுமே - மத்திய அமைச்சர் ஜிக்கேந்திர சிங்
'ஏஐ4பாரத் நீலேகனி மைய'த்தை உருவாக்கிய குழுவினரை வாழ்த்திப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "இந்திய மொழிக்கான செயற்கை நுண்ணறிவுப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த்தாகும். இதில் ஐஐடி மெட்ராஸ் தலைமை வகித்துச் செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏஐ4பாரத் மையத்தின் அதிநவீன ஆராய்ச்சிகள் உலகளவில் பயன்பாட்டிற்கு வரும் நாளை எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.
இந்த மையம் உருவாக்கியுள்ள பல்வேறு அதிநவீன 'ஓபன் சோர்ஸ்' வளங்கள் எவரும் பயன்படுத்தக் கூடியவையாகும். இதன் மாதிரிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை பின்வரும் இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.(https://ai4bharat.iitm.ac.in/) என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.