முகப்பு /செய்தி /கல்வி / கொரோனா காலத்திலும் ரூ.131 கோடி நன்கொடை திரட்டிய சென்னை ஐஐடி

கொரோனா காலத்திலும் ரூ.131 கோடி நன்கொடை திரட்டிய சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

நோய்த்தொற்றுக் காலத்தில், உலகம் முழுவதும் உள்ள சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களிடம் இருந்து கோவிட்-19 நிவாரணத் திட்டங்களுக்காக ரூ.15 கோடியை சென்னை ஐஐடி திரட்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகத் தொகையாக 2021-22ம் ஆண்டில் ரூ.131 கோடியை ஐஐடி மெட்ராஸ் திரட்டியுள்ளது.

இதுகுறித்து, பத்திரிக்கை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஐஐடி மெட்ராஸ் நிதியுதவி மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதற்காக, முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகத் தொகையாக 2021-22ம் நிதியாண்டில் ரூ.131 கோடியைத் திரட்டியுள்ளது.

முன்னாள் மாணவர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல், பெருநிறுவனங்கள், நன்கொடையாளர்கள், பெரும் செல்வந்தர்கள் ஆகியோரை அதிகளவில் ஈடுபடுத்துதல் போன்ற செயல்பாடுகள் மூலம் விரைந்து நிதி திரட்ட இக்கல்வி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னை ஐஐடி-யில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வல்லுநர்களைக் கொண்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள் அலுவலகம் கார்ப்பரேட் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நன்கொடையாளர்களை ஒருங்கிணைத்து நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

கோவிட்-19 நோய்த்தொற்று காலத்திலும், முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட தொகை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் வாயிலாக சென்னை ஐஐடி-க்கு நன்கொடை நிதி வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் இருமடங்காக பெருகியுள்ளது. பெருநிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு (CSR) ஒத்துழைப்பு மூலம் திரட்டப்பட்ட ரூ.131 கோடியில் ஏறத்தாழ பாதித்தொகை கடந்த நிதியாண்டில் தான் பெறப்பட்டுள்ளது.

உயர் தகுதிவாய்ந்த சென்னை ஐஐடி-யின் ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் முன்னோடி ஆராய்ச்சிப் பணிகள், சமூகம் சார்ந்த திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் ஆகியவற்றால்தான் இந்த அளவுக்கு நிதி திரட்ட முடிந்துள்ளது.

நோய்த்தொற்றுக் காலத்தில், உலகம் முழுவதும் உள்ள சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களிடம் இருந்து கோவிட்-19 நிவாரணத் திட்டங்களுக்காக ரூ.15 கோடியை (ஏறத்தாழ 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இக்கல்வி நிறுவனம் திரட்டியது. வெண்டிலேட்டர் (BiPAP), ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம் போன்ற அத்தியாவசிய மருத்துவ சாதனங்களை தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநில அரசுகளுக்கு வழங்க இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டது.

இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

First published:

Tags: Chennai IIT