கொரோனா காலத்தில் வெளிநாட்டுக் கல்வி: மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

மாதிரிப் படம்

கொரோனா காலத்தில் பொதுமக்கள் பலரும் பாதகமான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் உயர்கல்வி மாணவர்கள் வேறு விதமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

  • Share this:
வெளிநாடுகளில் கல்வி பயில வேண்டும் என்பது தனது பெருங்கனவாகக் கொண்டுள்ள மாணவர்கள் பலர். பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றால் அது கனவாகவே சில மாணவர்களுக்கு கரைந்தாலும், பெருந்தொற்று காலத்தில் அத்துனை மாணவர்களுக்கு அது சாத்தியமற்றதாக மாறி இருக்கிறது. சில மாணவர்கள், அந்த முடிவையே கைவிடவும் செய்திருக்கின்றனர். ஆனால், மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கின்றனர் வெளிநாட்டு கல்வி ஆலோசகர்கள்

புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்த வெளிநாடுகளில் கல்வி பயிலச் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை, கொரோனா காலத்தில் பெருமளவு சரிந்திருக்கிறது.

வெளிநாடுகளுக்கு கல்வி பயிலச் செல்வோர்

இந்தியா அளவில்

2016 – 3.72 லட்சம்
2017 – 4.57 லட்சம்
2018 – 5.20 லட்சம்
2019 – 5.89 லட்சம்
2020 - 2.61 லட்சம்
2021 – 71,769 (பிப் வரை)

தமிழ்நாடு அளவில்

2016 – 27,518
2017 – 36,261
2018 – 38,983
2019 – 41,488
2020 – 15,564
2021 – 4,355 (பிப் வரை)

வெளிநாடுகள் என்ன செய்கின்றன?

கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், பெரும் நாடுகள் தங்களுடைய சர்வதேச எல்லையை மூடித்தான் வைத்திருக்கின்றன. ஆனால், தனது நாட்டு பிரஜைகளுக்கு இலவசக் கல்வி வழங்கினாலும், வெளிநாட்டு மாணவர்கள் மூலமாகத்தான் லாபம் பார்க்கின்றன அந்நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள். வல்லரசுகள் கூட பொருளாதார சிக்கல்களை சந்தித்திருக்கும் இச்சூழலில், சில நாடுகள் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையிலான கொள்கைகளை வகுத்து வருகின்றன. எனவே, தங்களது மக்கள் தொகையில் 40 முதல் 50 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு தங்களது வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை தொடங்க பல நாடுகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தங்களது மருத்துவக் கட்டமைப்புகளில் சில சலுகைகளையும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்க சில நாடுகள் திட்டமிட்டு வருகின்றன

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள் காத்திருக்கத்தான் வேண்டும் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும், எவ்வளவு நாட்கள் என்ற விடையளிக்க இயலா கேள்வி எல்லா மாணவர்களுக்கும் எழத்தான் செய்கிறது. வெளிநாட்டிற்கு கல்வி பயிலச் செல்ல வேண்டும் என்ற முடிவில் உள்ளவர்கள், முதலில் எந்த படிப்பு என்பதை முடிவு செய்ய வேண்டும்; ஒவ்வொரு படிப்பிற்கு ஒவ்வொரு நாடு சிறந்ததாக இருக்கும். எனவே தேர்வு செய்த படிப்பை அடிப்படையாகக் கொண்டு எந்த நாடு என்பதை முடிவு செய்யலாம். படிப்பும், நாடும் முடிவான பிறகு எந்த கல்வி நிறுவனம் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாடும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எந்த கல்வி நிறுவனங்கள் எல்லாம் கற்பிக்க முடியும் என்பதற்கு சில வரைமுறைகளை வைத்துள்ளன. தேர்வு செய்யும் கல்வி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டதாக இருப்பதை உறுதி செய்வதில் அதிக கவனம் வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கு மொழிவள ஆய்வுத் தேர்வுகளை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கட்டாயமாக வைத்துள்ளன. IELTS, TOEFL, Cambridge English உள்ளிட்ட தேர்வுகள் எழுத வேண்டியதும் அவசியம்.

எந்த தகவலாக இருந்தாலும், உரியவர்களிடம் இருந்து அதனை பெற வேண்டியது அவசியம். எந்த நாடு என முடிவான பிறகு, அந்நாட்டு தூதரங்களை தொடர்பு கொள்வதன் மூலம்தான் அதிகாரப்பூர்வ விவரங்களை அறிந்துகொள்ள முடியும். எல்லா நாடுகளுமே வெளிநாடுகளில் உள்ள மாணவர்களையும், திறமையானவர்களை பணிக்கு எடுப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. எனவே, வெளிநாட்டு தூதரகங்களில் கல்விக்கான தனிப் பிரிவு செயல்படுகிறது. தூதரகங்களுக்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள், அதன் இணையதளங்களையோ, உதவி எண்களையோ தொடர்பு கொள்ளலாம். தனியார் முகமைகளாக இருக்கும்பட்சத்தில், அந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட நாடு அல்லது அதன் தூதரங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், மருத்துவப் படிப்பை பொறுத்தவரை, குறிப்பிட்ட நாடுகளில் பயின்றவர்கள்தான், இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். தகுதித் தேர்வை எழுதினால் மட்டுமே, இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்து பணியாற்ற முடியும். அது எந்தெந்த நாடு என்ற பட்டியலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

கல்விச் செலவுக்கு என்ன வழி?

ஏற்கனவே கூறியது போல, தனது நாட்டு பிரஜைகளுக்கு இலவசக் கல்வி வழங்கினாலும், வெளிநாட்டு மாணவர்கள் மூலமாகத்தான் லாபம் பார்க்கின்றன சில நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள். அதனால், கல்விக் கட்டணம் பல லட்சங்களாகத்தான் இருக்கும். வெளிநாட்டிற்கு கல்வி பயிலச் செல்லும்போது, கல்வி செலவு மட்டுமல்ல, தங்கும் செலவையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் வாழ்வதற்கான செலவு வேறுபடும். பின்னர், பயணச் செலவு. இவற்றையெல்லாமும் கருத்தில் கொண்டு நாட்டை தேர்வு செய்வதும் அவசியமாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முக்கிய பல்கலைக்கழகங்கள் பல உதவித் தொகை திட்டங்களை வைத்துள்ளன. வங்கிக் கடன் உள்நாட்டு கல்வியைவிட வெளிநாட்டுக் கல்விக்குக் கூடுதலாக வழங்குகிறது. படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக பணியாற்றுவதற்கு பல நாடுகள் அனுமதி அளிக்கின்றன. வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்ல நினைக்கும் மாணவர்கள் எல்லா நிலைகளிலும், ஆய்ந்தறிந்து சரியான முடிவை எடுக்க வேண்டும். ஆய்வுகள் சரியாக இருக்கும்பட்சத்தில், அதன் அடிப்படையில் நாம் எடுக்கும் முடிவுகளும் சரியாகவே அமையும்.
Published by:Karthick S
First published: