HOME»NEWS»EDUCATION»final year college classes started from today after corona lockdown in tamilnadu vai
Colleges Reopening | தமிழகத்தில் இன்றுமுதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்..
கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சிமுறையில் வகுப்புகளை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் வரும் நிலையில் டிசம்பர் 7-ம் தேதியான இன்று முதல் உயர்கல்வி நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளை திறக்கக்கூடாது. அப்பகுதியில் வசிக்கும் மாணவர்களை கல்லூரிக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் கற்றல் பணிகளை தொடரலாம்
விருப்பமுள்ள மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரலாம் என்றும், மற்றவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் கற்றல் பணிகளை தொடரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை இறுதியாண்டு மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 சதவீத மாணவர்கள்
ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஒரு சமயத்தில் 50சதவிகித மாணவர்களை மட்டுமே கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும் என்றும், சுழற்சி முறை வகுப்புகளை நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், மாணவர்களின் உடல் வெப்பநிலை கட்டாயம் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி
கல்லூரி வளாகத்தில் கொண்டாட்டங்கள், கலாச்சார நடவடிக்கைகள், கூட்டங்கள் போன்றவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விடுதிகளில் ஒருஅறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் விடுதி அருகிலுள்ள உறவினர்கள் வீட்டில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் மாணவர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.