• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • Exclusive: 5-ம், 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: கட்டாயக் கல்விச் சட்டம் சொல்வது என்ன?

Exclusive: 5-ம், 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: கட்டாயக் கல்விச் சட்டம் சொல்வது என்ன?

சித்திரிக்கப்பட்ட படம்

சித்திரிக்கப்பட்ட படம்

சட்டம் , அரசு, கல்வியாளர்கள் என்ன சொல்கின்றனர்

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பத்து வயதிலேயே பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலை குழந்தைகளுக்கு இருக்கிறதா, தேர்வில் தோல்வியைடைந்தால் என்னவாகும் என்றெல்லாம் பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்புகின்றனர்.

மாணவர்கள் முதலமைச்சர் தனிபிரிவுக்கு கடிதம்:

5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு வேண்டாம் என மாணவர்கள் சமீபத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அருணோதயா குழந்தை சங்கங்கள் கூட்டமைப்பு அளித்த கடிதத்தில், " நாங்கள் இப்போது தான் வேலைக்கு செல்லாமல் பள்ளிக்கு செல்கிறோம்.

வட சென்னை பகுதியை சேர்ந்த நாங்கள் முதல் தலைமுறை கல்வி கற்பவர்கள். இந்த அறிவிப்பால் எங்கள் கல்வி தடைபடும். எங்கள் பெற்றோர்கள் படிக்காதவர்கள். அவர்களால் கவனிக்கவும் முடியாது. எனவே எங்களை படிக்க அனுப்ப மாட்டார்கள். இதனால் இடைவிலகல் அதிகமாகும். அப்படி என்றால் எங்கள் மீதான வன்முறை அதிகமாகும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

அரசு: இலவச கட்டாயக் கல்வி சட்டம் பொது தேர்வு நடத்த சொல்கிறது

இந்த கடிதத்துக்கு பதில் அளித்திருந்த முதல்வர் தனிப் பிரிவு "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி திருத்தச் சட்டம் 2019-ன் படி 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளதால் தங்கள் மனுவை பரிசீலிக்க இயலாது" என கூறியுள்ளது.



சட்டம் : வழக்கமான( Regular) தேர்வுகள் நடத்த வேண்டும்:

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ன் முக்கியமான அம்சம் 8-ம் வகுப்பு வரை எந்த மாணவரும் பெயில் ஆக்கப்பட மாட்டார் என்பது. இந்த அம்சத்தை திருத்தி வந்தது தான் இலவச மற்றும் கட்டாயக் கல்வி திருத்தச் சட்டம் 2019.



2009-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் 16-வது பகுதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. "5-ம் மற்றும் 8-ம் வகுப்பு  கல்வி ஆண்டின் முடிவில் வழக்கமான(ரெகுலர்) தேர்வு நடத்தப்படும்.



இந்த தேர்வில் மாணவர் தேர்ச்சி பெறவில்லை என்றால் இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் மறுதேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்களை மாநில அரசு நினைத்தால் அதே வகுப்பை மீண்டும் படிக்க சொல்லலாம்" என்று திருத்தப்பட்டது.

கல்வியாளர்கள்: வழக்கமான தேர்வு பொதுத் தேர்வு அல்ல

முதல்வர் தனிப்பிரிவிலிருந்து கிடைத்த பதிலை ஏற்க முடியாது என அருணோதயா அமைப்பின் நிறுவனர் விர்ஜில் டி சாமி கூறுகிறார். இலவச மற்றும் கட்டாயக் கல்வி திருத்தச் சட்டம் கூறுவது பள்ளியில் வழக்கம் போல் ஆண்டு தேர்வு நடத்த வேண்டும் என்பது தான். ஒரே வினாத்தாள் தயார் செய்து அதை பொதுத் தேர்வாக அனைவருக்கும் நடத்த வேண்டும் என கூறவில்லை. நலிந்த சமூக பொருளாதார பின்னணியிலிருந்து வரும் குழந்தைகள் இந்த தேர்வினால் இடைவிலகல் ஆகக் கூடும். அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களின் குடும்பங்கள் அவர்களை பணிக்கு அனுப்பலாம்" என்கிறார்.

5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு நடத்த வேண்டும் என்று கூறும் அதே வேளையில் இந்த சட்டத்தின் 30-வது பகுதியில் "எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரும் எந்த பொதுத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை" என கூறுகிறது. இந்த அம்சம் 2009-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்ட வடிவத்திலேயே உள்ளது. இதில் 2019-ல் அரசு எந்த திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை.

"5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளில் மாணவர்களின் திறனை கணிக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க முடியும். பொதுத் தேர்வின் மூலம் அந்த நோக்கத்தை அடைய முடியாது. எந்த மாணவரும் அதே வகுப்பில் தொடர மாட்டார் என்று அரசு கூறினாலும் குறைந்த மதிப்பெண் பெற்ற குழந்தைகள் 'கற்றல் திறன் குறைந்தவர்' என்றோ அல்லது வேறு பெயரிலோ பிரிக்கப்படுவர். அது குழந்தைகளின் மனதில் பெரும் உளைச்சலை ஏற்படுத்தும். பின்லாந்து சென்ற வந்த அமைச்சர் அங்கிருந்து என்ன கற்றுக் கொண்டார்" என்கிறார் குழந்தை உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன்.

உளவியல் பாதிப்புகள் ஏற்படும்:

பொதுத்தேர்வு என்பது அதை எழுதக்கூடிய மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கண்டிப்பாக ஒரு பதட்டத்தை ஏற்படுத்தும். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் இந்த பதட்டத்தை கையாள மாணவர்களுக்கு சற்று தெரிந்திருக்கும். எனினும் கூட ஆங்காங்கே தேர்வு முடிவுகள் காரணமாக தற்கொலைகள் நடக்கின்றன. இவற்றை முழுமையாக தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் பத்து வயதில் ஒரு பொதுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் "5-ம் வகுப்பு பொதுத்தேர்வு எத்தனை குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் பாதிக்கப் போகிறது என்பது, கடந்த மூன்று நாட்களில் ஏழு தாய்மார்கள் தங்கள் குழந்தை 5-ம் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று அழைத்து வந்ததில் தெரிகிறது.

குழந்தைகள் நட்பு வட்டத்தை அமைக்க தொடங்கும் போது தேர்ச்சி பெறாத அல்லது குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். தற்கொலைகள் அதிகரிக்கும். சுயமரியாதை இருந்தால் அரசு இந்த தேர்வு ரத்து செய்ய வேண்டும்" என்று கூறுகிறார்.

Also see....

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: