ஹோம் /நியூஸ் /கல்வி /

எஸ்.சி, எஸ்.டிக்கு இல்லை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு மட்டும் நிதியா? எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

எஸ்.சி, எஸ்.டிக்கு இல்லை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு மட்டும் நிதியா? எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

சென்னை ஐ.ஐ.டியில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம் நிதி ஒதுக்கியுள்ளதற்கு எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம், தனது சிஎஸ்ஆர் மூலம் ஒதுக்கிய ரூ.10.5 கோடி நிதியில், பட்டியல் சாதிகள்(எஸ்சி), பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படாததற்கு திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை ஐஐடி-யில் பயிலும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து (சிஎஸ்ஆர்) ரூ.10.5 கோடியை வழங்கியது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி பேராசிரியர் மகேஷ் பஞ்சங்னுலா (Mahesh Panchagnula) ," இந்த கல்வி உதவித்தொகை அளித்ததற்காக பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்துக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இந்த ஆதரவு மிகவும் அவசியமானவை. ஏனெனில், கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம் இந்த இடத்தை அவர்கள் அடைந்துள்ளனர். இதன் மூலம், இந்த நிறுவனம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக மாற்றியுள்ளது" என்று தெரிவித்தார்.

ஐஐடி-யின் இந்த கல்வி உதவித் தொகை ஏற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் கணக்கில், " இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் பவர் கிரிட் கார்ப்பரேசன் மிகுந்த பாகுபாட்டுடன் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் ரூ.10.5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.  எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவு மாணவர்களின் நிலை என்ன?

இந்த நிதியாண்டில், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து, ஐஐடி மெட்ராஸ் ஒரே நிறுவனத்திடமிருந்து பெற்ற அதிகபட்ச தொகை இதுவாகும். ஆனால், இதில் எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவு மாணவர்கள் ஒரு ரூபாய் கூட பெறாமல் இருப்பது வேதனையளிக்கும் செயலாகும்.

நியாயமற்ற, சாதி கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த நிதியை  மின்சாரத் துறை அமைச்சகம் உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய பவர் கிரிட் கார்ப்பரேசனின் இயக்குனர் வி.கே.சிங், இந்த கல்வி உதவித்தொகை திட்டம், மக்களிடமிருந்து கிடைக்கும் வருமானத்தை சமுதாயத்திற்கே திருப்பி வழங்குவதற்கான நேரடி வழிமுறை என்பதில், தமது நிறுவனம் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார். கல்விக் கட்டண உயர்வு காரணமாக, மாணவர்களின் படிப்புச் செலவுக்கான பணத் தேவைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த உதவித் தொகையை பெற்று பயனடையும் மாணவர்களின் வாழ்க்கையில், உண்மையிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.  

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான தகுதிகள்:பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு, அரசியலமைப்பின் 103-வது திருத்தச் சட்டம் 2019-ன் படி 15(6) மற்றும் 16(6) விதிகளின் கீழ் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.இந்திய அரசின் ஆணைப்படி தற்போது நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டால் பிரிவுகள்,1.பட்டியல் சாதிகள் (SC)2.பட்டியலின பழங்குடியினர்(ST)3.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) ஆகியோர் அல்லாத மற்றும் ரூ.8 லட்சத்திற்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் கொண்டவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் பலன்களை பெற தகுதியுடையவர்கள் ஆவர். 

முன்னதாக, மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பொருளாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் இடஒதுக்கீடு அளித்தது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொருளாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு எதனடிப்படையில் ரூ.8 லட்சம் ஆண்டு வருமானமாக  நிர்ணயிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியது.

இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு விசாரிக்க இருப்பதால், நிபந்தனையுடன் இந்தாண்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கு பொருளாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்றும் தீர்ப்பளித்தது.

Published by:Salanraj R
First published:

Tags: Chennai IIT