அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு செப்டம்பர் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த இறுதி பருவத் தேர்வினை அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உட்பட 1,51,000 மாணவர்கள் எழுதுவதற்கு விண்ணப்பித்தனர்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணி நேரம் 40 வினாக்களுக்கு நடைபெற்றத் தேர்வில் 30 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு துவங்கி 4 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது. ஒரு பிரிவிற்கு 40,000 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
மாணவர்களின் விபரங்கள், புகைப்படம், செல்போன் எண், இமெயில் ஐடி, அவர்களுக்கான தனிப்பட்ட தேர்வு எழுதுவதற்கான இணையதளத்தில் இருக்கும். தமிழகம் முழுவதும் மாணவர்கள் படிக்கும் கல்லூரியின் ஆசிரியர்கள் 18 ஆயிரம் பேர் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். தேர்வினை மாணவர்கள் தான் எழுதுகின்றனரா? என்பதை மேற்பார்வைச் செய்தனர்.
அப்போது பல மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதில் ஆள்மாறாட்டம் போன்றவையும் நடந்துள்ளது. தேர்வு எழுதும் போது மாணவர் ஒருவர் படுத்துக் கொண்டு வேறு ஒருவரிடம் கேட்டு எழுதுவதும், டீ கடையில் நண்பர்களுடன் அமர்ந்தும் ஆள் மாறாட்டம் செய்து எழுதிய மாணவர் தான் ஆள்மாற்றட்டம் செய்வது பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேர்வின்போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்தப்பின்னர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Also read... எனது தந்தையின் சமூகப் பணியையும் அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன் - நடிகர் விஜய் வசந்த்
மேலும் தேர்விற்கான விதிமுறைகளில், ஆன்லைன் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்தில் தேவையற்ற சத்தம் எழுந்தாலும் மாணவர்களின் தேர்வு செல்லாது எனவும், ஆன்லைன் தேர்வுக்கான மின்னனு சாதனங்களை ஏற்பாடுகளையும் மாணவர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களை அறிவுறுத்தியிருந்தது.
இறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண்கள் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது. எழுத்துத்தேர்வுக்கு 50 மதிப்பெண்களும் அகமதிப்பீட்டிற்கு 20 மதிப்பெண்களும், முந்தைய செமஸ்டர் தேர்விலிருந்து 30 மதிப்பெண்கள் என ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.