இந்த கல்வியாண்டில், பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு (CUET- PG) மூலம் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறாது என்று டெல்லி பல்கலைக்கழகமும், ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகமும் அறிவித்துள்ளன.
முன்னதாக, 2022-23ம் கல்வியாண்டு முதல், நாட்டின் 42 மத்திய பல்கலைக்கழகங்களில், முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைகள் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறும் என்று பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்தது. இருப்பினும், இளங்கலை பொது நுழைவுத் தேர்வு (CUET - UG) போன்று முதுகலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு கட்டாயமில்லை என்றும் தெரிவித்தது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த குறுகிய கால அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த டெல்லி பலக்லைக்கழக பதிவாளர் விகேஷ் குப்தா, "இந்த கல்வியாண்டிற்கான முதுகலை மாணவர்கள் சேர்க்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது. புதிய முறையை பழகி கொள்வதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படும். பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் கல்வி குழுமத்தின் உறுப்பினர்கள் இதுகுறித்து விரைவில் முடிவெப்பார்கள். அதனடிப்படையில், செயல்பட இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக
பதிவாளர் நஜிம் ஹுசைன் இதுகுறித்து கூறுகையில்,"நடப்பு ஆண்டில் பழைய சேர்க்கை முறையே தொடர உள்ளோம். எதிர்காலத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, முதுநிலை படிப்புகளுக்கும், மேம்பட்ட பட்டயப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை, புதிதாக அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு (CUET- PG) மூலம் நடைபெறும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
CUET (PG) தேர்வு:
முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு வரும் ஜுலை மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
CUET (PG) 2022 -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cuet.nta.nic.in/ . ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 18-06-2022 ஆகும். செலுத்தப்படும் கட்டணம் அன்றிரவு 11.50 மணி வரை பெறப்படும்.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
https://cuet.nta.nic.in/ மற்றும்
www.nta.ac.in
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். cucet@nta.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.